ஒரு ஆய்வுத்துறை அதிகாரி போலியான பங்கு முதலீட்டு திட்டத்தில், ரிம 600,000-க்கும் அதிகமாகத் தொகையை இழந்தார்.
மார்ச் 21 அன்று ஒரு புலன குழுவில் சேர்க்கப்பட்ட பின்னர், 57 வயதான பெண் முதலில் இந்தத் திட்டத்தில் ஈர்க்கப்பட்டதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
அவர் ஆரம்ப முதலீடாக ரிம 14,000 முதலீடு செய்தார், மேலும் ரிம 1,000 இலாபத்தைப் பெற்றுக்கொண்டு அதைத் திரும்பப் பெற்றதின் மூலம் தொடர்ந்தும் முதலீடு செய்யும் நம்பிக்கையைப் பெற்றார்.
“ஏப்ரல் 23 முதல் ஜூன் 4 வரை, அவர் தனது சேமிப்பைப் பயன்படுத்தி மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரிம 600,000 க்கும் அதிகமான 28 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ரிம 50,000 எடுத்துத் திரும்ப முயற்சித்தபோது, அதைப் பெற ரிம 200,000 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதால் சந்தேகமடைந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று ரொம்பின் காவல் தலைமையகத்தில் ஒரு காவல் புகாரை அளித்தார்.
மோசடி குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.