இராகவன் கருப்பையா – இதுவரையில் ம.இ.கா. தலைவர்களிலேயே ஊழல் அற்ற நிலையில் கடமையுடன் கண்னியமாக செயலாற்றிய தலைவர் என்ற முத்திரையை பெறும் தகுதி நிச்சயமாக அதன் 8ஆவது தலைவர் பழநிவேல் அவர்களுக்கு உள்ளது எனலாம்.
சிறிது காலம் நோயுற்றிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடைந்த அவரை முன்னாள் பிரதமர் படாவியுடன் கூட நாம் ஒப்பிடலாம்.
ஏனெனில் அதிகாரத்தில் இருந்த போது இவ்விருவருமே எவ்விதமான ஊழல் விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டதாக நம் நினைவுக்கு எட்டிய வரையில் செய்திகள் வெளியாகவில்லை.
அரசாங்கப் பதவிகளில் இருந்த வேளையில் இவர்கள் செய்த முடிவுகள் சில சமயங்களில் குளறுபடியாக முடிந்த போதிலும் தனிப்பட்ட வகையில் ‘மிஸ்தர் க்ளீன்'(ஊழலற்றவர்) எனும் அடையாளத்தை இவ்விரு தலைவர்களுமே சம்பாதித்தார்கள்.
பழநிவேல் அடிப்படையில் ஒரு அரசியல்வாதியே கிடையாது. தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளராகத்தான் அவர் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த 1970களின் பிற்பகுதி தொடங்கி மலேசிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் பெர்னாமா ஆகிய ஊடகங்களில் அவர் பணியாற்றிய காலத்தில் கூட அவருக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது. எனினும் ம.இ.கா.வில் ஒரு சாதாரண உறுப்பினராக இருந்தார்.
பிறகு 1990களின் தொடக்கத்தில் ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் சாமிவேலு அவரை தனது பத்திரிகைச் செயலாளராக நியமனம் செய்த போதுதான் அநேகமாக அவருக்கு அரசியல் ஆசை வந்திருக்கும் என்று நமக்குத் தோன்றுகிறது.
அதே வேளையில் அவருக்காக சாமிவேலு திரைமறைவில் ‘மேகா’ திட்டங்களை வகுத்தார் என்று கூறப்படுகிறது.
தானும் கட்சியின் துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையாவும் ‘எலியும் பூனையுமாக’ இருந்த அந்த காலக்கட்டத்தில் தன் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக் கூடிய ஒரு ‘தளபதி’யை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் பழநிவேலை அடையாளம் கண்டார் சாமிவேலு.
இவ்வாறாக சாமிவேலுவின் அனுக்கமான அரவணைப்பில் கட்சியின் உயர்மட்டத்திற்கான படிகளில் சன்னம் சன்னமாக காலடி வைத்த பழநிவேல், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு அரசியல் களம் கன்டார். மொத்தத்தில் சாமிவேலுவின் செல்லப் பிள்ளையாகவே அவர் வளர்ந்தார்.
உண்மையில் பார்க்கப் போனால் சுப்ரமணியம் சின்னையாவுடன் ஒப்பிடுகையில் பழநிவேலுக்கு அடிமட்டத் தொண்டர்களோ, ஆதரவோ, அரசியல் ஆளுமையோ கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாமே சாமிவேலுவின் கண் அசைவுதான்.
அதே வேளையில் சுப்ரமணியம் சின்னையாவுக்கு நாடு தழுவிய நிலையில் சாமிவேலுவை விட அதிகமானத் தொண்டர்கள் அப்போது இருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
கடந்த 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தல்களின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நடப்புத் துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையாவுக்கு எதிராக பழநிவேலை களமிறக்கிய சாமிவேலு, தனது திட்டத்தில் மகத்தான வெற்றியும் கண்டார்.
அது பழநிவேலின் வெற்றி என்பதைவிட சாமிவேலுவின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் 27 ஆண்டுகளாகத் துணைத் தலைவராக இருந்த சுப்ரமணியம் சின்னையாவுக்கு அரசியலில் புற வழியைக் காட்டிவிட வேண்டும் என்பதே சாமிவேலுவின் நீண்ட நாள் திட்டம்.
அதற்கு ஏற்றவாறு அத்தோல்வி சுப்ரமணியம் சின்னையாவின் அரசியல் அஸ்தமனத்திற்கு வித்திட்டது எனும் விவரம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
பிறகு 2010ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து விலகிய சாமிவேலு, கட்சியை பழநிவேலிடம் ஒப்படைத்தார். எனினும் பழநிவேல் சுமார் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அப்பதவியை அலங்கரிக்க முடிந்தது.
அறியாமை காரணமாக அப்பதவியை அவர் இழக்க நேரிட்டது துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தலைவர் எனும் வகையில் கட்சியின் விதிமுறைகளை அவர் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் பழநிவேல் அதில் கோட்டைவிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சுப்ரமணியம் சதாசிவத்திற்கும் இடையே ஏற்பட்ட தலைமைத்துவ போராட்டத்தில் நியாயம் நாடி நீதிமன்றம் சென்றது அநேகமாக தனது வாழ்நாளில் அவர் செய்த மிகப் பெரியத் தவறாகிவிட்டது.
ஏனெனில் ம.இ.கா.வின் விதிமுறைகளின்படி எந்த ஒரு உறுப்பினர் கட்சியை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாலும் இயல்பாகவே தனது உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிடுவார்.
அவ்வகையில் கட்சியில் அனைத்தையும் இழந்த நிலையில், அரசியலில் இருந்தே அவர் பிறகு ஒதுங்கிக் கொண்டது பரிதாபகரமான நிலைதான்.
ஒரு தீவிர சமய பக்தரான பழநிவேல், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து 11 வருஷங்களுக்கு துணையமைச்சராகவும் பிறகு 2015 ஆண்டு வரையில் முழு அமைச்சராகவும் இருந்த காலக்கட்டத்தில் எவ்வித ஊழல் விவகாரங்களிலும் சம்பந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நல்ல மனிதர் என்ற முத்திரையை பெற்ற அவர் அரசியல் செயல்பாடுகளில் கடமை, கண்னியம், கட்டுப்பாடு என்ற நிலைபாட்டுடன் செயல்பட்டவர் என்ற பெருமையுடன
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.