ஈப்போ ‘வெடிப்பு’: குவாரி நடவடிக்ககள் காரணம் அல்ல  காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது

ஈப்போவின் பல பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்களுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விரைவில் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தும், ஏனெனில் இந்த விஷயம் பொது நலன் சம்பந்தப்பட்டது.

பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் கூறுகையில், மாநில கனிம மற்றும் புவி அறிவியல் துறை மற்றும் நிலநடுக்கத்தை அனுபவித்த பொதுமக்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து, போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

“இந்தச் சம்பவம் குவாரி நடவடிக்கைகளால் ஏற்படவில்லை என்று துறை எங்களுக்குத் தெரிவித்துள்ளது”.

“எனினும், கடந்த ஆண்டு இதே போன்ற வெடிப்பு ஏற்பட்டிருந்தது காரணமாக, விசாரணைகள் தொடரும்,” என அவர் இன்று இப்போவில் மாநில துணை காவல் தலைமையின் பொறுப்புக்களை பொறுப்பேற்ற விழாவிற்குப் பின் நடைபெற்ற செய்தியறிக்கையில் தெரிவித்தார்.

இதுவரை, பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகக் காவல்துறைக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால் அதில் தலையீடு ஏற்படும் வகையில் பொது மக்கள் ஊகக் கருத்துகள் கூறுவதிலிருந்து தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை தெரிவித்தார்.

நிலைமை கட்டுக்குள் இருப்பதால், பொதுமக்கள், குறிப்பாக நிலநடுக்கத்தை அனுபவித்தவர்கள், அமைதியாக இருக்கவும், பொறுமையாக இருக்கவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் ஹிசாம் கேட்டுக் கொண்டார்.

நேற்று காலை 10.30 மணிக்குக் கெமோர் மற்றும் செப்போரைச் சுற்றி வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உலு கிந்தா பொது செயல்பாட்டுப் படை (General Operations Force) வடக்குப் படைப்பிரிவில் வெடிப்புகள் தொடர்பான எந்தப் பயிற்சியும் நடத்தப்படவில்லை என்று ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது தெளிவுபடுத்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, காலை 11.06 மணியளவில் தாசெக், பேராக் ஸ்டேடியம், மேரு, ஃபாலிம், மன்ஜோய், கெமோர் மற்றும் சுங்கை சிபுட் உள்ளிட்ட நகரத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலத்த இடி சத்தம் கேட்டது.