புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது

நேற்று காலை, புக்கிட் செலம்பாவ், தாமான் செம்பகா இந்தாவில் சாலையோரத்தில் பாறை நிலத்தில், புதிதாகப் பிறந்த ஒரு ஆண் குழந்தை துணி அல்லது போர்வை இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

காலை 9.55 மணிக்கு இந்த விவகாரம்குறித்து போலீசாருக்கு அழைப்பு வந்ததாகக் கோலா மூடாக் காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

துணிகளை உலர்த்திக் கொண்டிருந்த ஒரு குடியிருப்புவாசி உரத்த அழுகை சத்தம் கேட்டு அந்தப் பகுதியைத் தேட ஆரம்பித்தார். சாலையோரத்தில் குழந்தை கிடப்பதைக் கண்டு அலறினார்.

“அண்டை வீட்டார் விரைவாக உதவிக்கு வந்தனர், காவல்துறையினரைத் தொடர்பு கொள்வதற்கு முன்பு குழந்தையைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்,” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“குழந்தை மேலதிக பரிசோதனைக்காகச் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது”.

“மருத்துவப் பரிசோதனைகள் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்தன, வலது கண்ணிலும் உடலின் வலது பக்கத்திலும் சிறிய கீறல்கள் மட்டுமே இருந்தன,” என்று ஹன்யான் கூறினார்.

இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக, 17 வயது ஆண் மேல்நிலைப் பள்ளி மாணவர் நேற்று முதல் இரண்டு நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

“அவரது துணைவி என்று நம்பப்படும் 19 வயது பெண் ஒருவர் மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று அவர் கூறினார்.