காணாமல் போனதாக நம்பப்படும் பிரிட்டிஷ் இளைஞர் இன்னும் மலேசியாவில் இருக்கலாம் என்கின்றனர் போலீசார்

மலேசியாவிற்கு ஒரு வழி விமானத்தில் ரகசியமாக ஏறிய பிறகு காணாமல் போன 17 வயது பிரிட்டிஷ் பள்ளி மாணவன் இன்னும் நாட்டில் இருக்கலாம் என்று காவல்துறை கூறுகிறது.

காணாமல் போனவர் விசாரணையின் ஒரு பகுதியாக ஐந்து பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

“வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் அவர் இன்னும் மலேசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டரின் சீடில் பகுதியைச் சேர்ந்த ஏ-லெவல் மாணவரான டேவிட் பாலிசோங், ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி, தனது சகோதரரிடம் பள்ளி விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருப்பதாகக் கூறினார்.

அதற்கு பதிலாக, அவர் மான்செஸ்டரிலிருந்து கோலாலம்பூருக்கு தனியாக விமானத்தில் சென்றார். அதன் பிறகு அவர் தனது தொலைபேசியை துண்டித்து விட்டார், அதோடு மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கவில்லை.

பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த பாலிசோங்கிற்கு மலேசியாவுடன் எந்த தொடர்பும் இல்லை. அவர் தனது வங்கிக் கணக்கில் 1,200 பவுண் (6,900 ரிங்கிட்) வைத்திருந்தார், வந்தவுடன் அவருக்கு 90 நாள் விசா வழங்கப்பட்டது.

ஜூன் 7 ஆம் தேதி பாலிசோங் மலேசியாவிற்குள் நுழைந்ததை குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் ஜகாரியா ஷாபான் உறுதிப்படுத்தினார். அந்த மாணவன் காலை 8.29 மணிக்கு KLIA-க்கு வந்ததாக நுழைவுப் பதிவுகள் காட்டுகின்றன.

அவர் வந்த பிறகு KL சென்ட்ரலுக்கு பேருந்தில் சென்றதாக நம்பப்படுகிறது.

-fmt