காஜாங்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் வகுப்புத் தோழன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக 13 வயதுடைய நான்கு மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் 12.57 மணிக்கு அவர்களது வகுப்புத் தோழர் அளித்த புகாரைத் தொடர்ந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் புகார்தாரரும் அவரது வகுப்பு தோழர்களும் ஒரு கருத்து வேறுபாட்டை நிவர்த்தி செய்ய ஷாப்பிங் சென்டருக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சம்பவத்தின்போது, புகார்தாரர் இரண்டு மாணவர்களால் தாக்கப்படும் ஒரு வைரல் வீடியோ பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் இரண்டு பேர் தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி அந்தச் செயலைப் பதிவு செய்துள்ளனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றார், அங்கு அவருக்கு முகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என்று நாஸ்ரோன் மேலும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களும் நேற்று இரவு 8.35 மணிக்குக் காஜாங்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உதவ ஆகஸ்ட் 2 வரை இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு, வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காகத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323, குற்றவியல் மிரட்டலுக்கான அதே சட்டத்தின் பிரிவு 506 மற்றும் 1955 சிறு குற்றச் சட்டத்தின் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
மாணவர்கள் எப்போதும் பள்ளி விதிகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஷாருல்ஹாஸ்ராம் ராம்லியை 017-2530380 என்ற எண்ணில் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

























