பசுமையைத் தேடும் திக்கற்ற மஇகா

 இராமசாமி உரிமை தலைவர் – மஇகா பசுமையைத் தேடுவது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியதாகும்.

பாரிசான் கூட்டணியின் விசுவாசமான கூட்டணிகட்சியாக இருந்த மஇகாவுக்கு, அம்னோ தரவேண்டிய மரியாதையும் கண்ணியமும் வழங்கப்படவில்லை.

அம்னோ அரசியல் சிக்கல்களை சந்தித்தபோது மஇகா ஒருபோதும் அதனை விட்டு விலகவில்லை. அதே ஒற்றுமை உணர்வு அம்னோவிலும் இருக்க வேண்டும், மஇகா மற்றும் மசீச அரசியல் சிக்கல்களை சந்தித்தபோது அவற்றை விட்டு விடாமல் இருக்க வேண்டும்.

அதனால், மஇகா பெரிக்காதான் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அம்னோ குறை கூற முடியுமா?

சில மஇகா மாநில பிரிவுகள் ஏற்கனவே கட்சியை பாரிசான் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன, ஆனால் இதற்கான இறுதி முடிவு தலைமைத்துவம் எடுக்க வேண்டும்.

மஇகா-வின் உண்மையான பிரச்சினை என்னவெனில், இந்திய சமூகத்தில் வேரூன்றிய ஆதரவுடன் தன்னை ஒரு முன்னணி இந்திய அரசியல் கட்சியாக நிறுவுவதற்கு முயற்சிப்பதற்குப் பதிலாக, தேர்தல் இருக்கை ஒதுக்கீடுகளுக்காக அம்னோ மீது நீண்டகாலமாக அதிகமாக சார்ந்திருப்பதுதான்.

பல வருடங்களாக, மஇகா தனது பாரிசான் நிலை மாற்றமற்றதாக இருக்கும் என்றும், அம்னோ தொடர்ந்து தனது கூட்டணித் தொடர்புகளை மதிக்கும் என்றும் தவறாக நம்பிக் கொண்டது.

துரதிர்ஷ்டவசமாக, கடுமையான அரசியல் சூழலில், மாறிவரும் சூழ்நிலைகளில் அம்னோவின் அணுகுமுறை முந்தையது போல இருக்காது என்பதை  மஇகா உணரத் தவறி விட்டது.

அம்னோ டிஏபியை அரசியல் தேவைக்காக அரவணைத்தது, ம இ கா மற்றும் மசீசாவுக்கு துரோகம் செய்வதோடு மட்டுமின்றி, பாரிசான் கூட்டணியின் கூட்டாண்மை நடைமுறையின் உணர்வுக்கும் விரோதமாக இருந்தது. அம்னோ தனது அரசியல் உயிர்வாழ்விற்காக டிஏபியைத் தழுவிக் கொள்ள முடிந்தால், மஇகா தன் நிலைத்தலுக்காக பெரிக்காதானுடன்  பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை.

அம்னோவானது மஇகா-வையும் மற்றும் மசீச-வையும் பின்புறம் குத்தினால், மஇகா எதிர்க்கட்சித் தளத்தில் பசுமையான, நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளை தேடுவதுதான் விவேகமான செயலாகும், அதில் எந்த குறையும் இல்லை.