இராகவன் கருப்பையா- இந்நாட்டில் இனத்தையும் மதத்தையும் மட்டுமே அரசியல் ஆயுதங்களாகக் கையிலெடுத்து ஆதாயம் காணத் துடிக்கும் சில மலாய்க்கார அரசியல்வாதிகளின் யுக்தி நாளடைவில் வலுவிழக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
உயர்கல்வி பெறும் இளம் மலாய்க்காரர்களின் முற்போக்கு சிந்தனை இன ஒதுக்கலையோ இன ரீதியான அரசாங்கக் கொள்கைகளையோ விரும்பவில்லை. அத்தகைய இளைஞர்கள் பன்மைவாதத்தையே விரும்புகின்றனர் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புலப்படுத்தியுள்ளது.
நியாயமான, ஐக்கியமுடைய ஒரு மலேசியாவை உருவாக்குவதற்கு, இன ரீதியானக் கொள்கைகளை நீக்கிவிட்டு பன்மைத்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும் என இளம் மலாய்க்காரர்கள் விரும்புவதாக ‘இமான் ரிசர்ச்'(Iman Research) எனும் நிறுவனம் நடத்திய ஆய்vவு காட்டுகிறது.
இன ரீதியானக் கூறுகளைக் கொண்ட, என்.இ.பி.(NEP) எனப்படும் ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ போன்றத் திட்டங்கள் சீர்திருத்தம் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். நாட்டின் பொருளாதார நீரோட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதார் விடுபடுவதை அவர்கள் விரும்பவில்லை.என்.இ.பி.யின் அசல் இலக்கு திசைமாறி தற்போது உயர் நிலையில் செல்வாக்குடைய, குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே அதனால் பயன் பெறுகின்ற குழலை அந்த இளைஞர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.பள்ளிக்கூட அமைப்பு முறைகள் சமூக பிரிவினைவாதங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதால் பல்கலைக்கழகம் சென்ற பிறகுதான் மலாய்க்காரர் அல்லாதாருடனான நேர்மறையான தொடர்புகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த அலாதியான அனுபவத்தை முக்கியமான ஒன்றாகக் கருதும் அவர்கள், அதனை போற்றி வரவேற்பதாக அந்த ஆய்வு காட்டுகிறது.
“பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த பிறகுதான் மலாய்க்காரர் அல்லாதாரின் சமயம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான நிறைய விஷயங்கள் எங்களுக்கு நன்றாக புலப்பட்டது. இந்த அனுபவம் பள்ளிப்பருவத்தில் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று அவர்கள் குறிப்பிடுவது நமக்கும் சற்று வியப்பாகத்தான் உள்ளது.
அப்படியென்றால் பள்ளிக்கூட அமைப்பு முறைகளிலும் பாடத் திட்டங்களிலும் காலங்காலமாக நிறைய குளறுபடிகள் உள்ளன என்பதைத்தான் இது உணர்த்துகிறது, உறுதிப்படுத்துகிறது.
“தேசிய பள்ளிக்கூடங்கள் சமயப் பள்ளிகளாக மாறிவிட்டன. அதனால்தான் மலாய்க்காரர் அல்லாதாரிடையே அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது,” என முன்னாள் பிரதமர் மகாதீர் கடந்த 2018ஆம் ஆண்டில் குறிப்பிட்டதை இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறுவதில் தவறில்லை.
ஆக, மலாய்க்கார இளைஞர்களிடையே நிலவும் இந்த சீரிய சிந்தனையானது, குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளுக்கு ‘கசப்பான ஒரு மருந்தாகவே’ அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.
இருப்பினும், ‘இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள்,’ எனும் கோட்பாட்டின் கீழ், வருங்காலத்தில் நாடு மேம்பாடு அடைவதற்கு நேர்மறையானத் தடத்தை அமைக்க இந்த உணர்வு உதவும் என்று உறுதியாக நம்பலாம்.

























