வயதான மக்களுக்கான சுகாதார நிதி சீர்திருத்தங்களை ஆராய MOH தயாராக உள்ளது.

சுகாதார அமைச்சு, மலேசியா வயதான சமூகமாக மாறுவதற்கேற்ப, முதியோர்களுக்கான சுகாதார நிதி சீர்திருத்தங்களை ஆராய தயாராக உள்ளது.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் அல்லது முதுமையில் சுகாதாரத் தேவைகளுக்கு நிதியளிக்க சிறப்புப் பங்களிப்பு வழிமுறைகளை நிறுவுதல் ஆகியவை பரிசீலனையில் உள்ள திட்டங்களில் அடங்கும் என்று அமைச்சர் சுல்கேப்லி அகமது கூறினார்.

“இந்த மக்கள்தொகை மாற்றம் நிச்சயமாகப் பொது நிதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும் வலுப்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தனது அமைச்சகத்திற்கான 13வது மலேசியா திட்டம் (13MP) மீதான விவாதத்தை நிறைவு செய்யும்போது கூறினார்.

அதன் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக, சிகரெட், வேப்பிங், ஆல்கஹால் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பொருட்கள்மீதான சுகாதார சார்பு வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய்கள்மூலம் நிதியளிக்கப்படும் ஒரு தேசிய சுகாதார நிதியை நிறுவுவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்

“இது போன்ற வரிகளை அமல்படுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை நோக்கிய நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேகரிக்கப்படும் வருவாய் சிகிச்சை சேவைகளை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பொது சுகாதார முயற்சிகள் மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

பாரம்பரிய நிதி முறைகளை மட்டுமே நம்பியிருக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, சுகாதார நிதியுதவிக்கு ஒரு புதுமையான மற்றும் நிலையான அணுகுமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய ஒரு விஷயத்தில், உறுப்புத் தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்த, Human Tissue Act 1974 ஐ அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாகச் சுல்கேப்லி கூறினார்.

பிரத்யேக ஆட்டிசம் சேவை மையம்

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி ஷுக்ரி, தனது அமைச்சகத்திற்கான 13MP தீர்மானத்தின் மீதான விவாதத்தை முடித்து வைத்து, சமூக நலத்துறை சிறப்புத் தேவைகளுள்ள குழந்தைகளுக்காக ஒரு பிரத்யேக ஆட்டிசம் சேவை மையத்தை நிறுவும் என்று கூறினார்.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி ஷுக்ரி

இந்த மையம், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் நோயறிதல், ஆரம்பகால தலையீட்டு திட்டங்கள் மற்றும் குடும்ப ஆதரவு உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கும் என்றும், ஆட்டிசம் தொடர்பான சேவைகளுக்கான ஒரே இடமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம்வரை, நாடு முழுவதும் மொத்தம் 579 சமூக அடிப்படையிலான மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதனால் 20,000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைகிறார்கள் என்றும் நான்சி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் எவோன் பெனடிக், தனது அமைச்சகத்திற்கான விவாதத்தை முடித்து வைத்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை நாடு முழுவதும் 237,581 தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மொத்தம் ரிம 6.32 பில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகச் செனட்டில் தெரிவித்தார்.

Tekun Nasional, Amanah Ikhtiar Malaysia, Bank Rakyat, SME Bank, SME Corp, Pernas மற்றும் the Malaysia Cooperative Commission.உள்ளிட்ட அமைச்சகத்தின் ஏஜென்சிகள் மூலம் நிதி வழங்கப்பட்டது என்றார்.

“இந்தச் சாதனை சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) சாதகமான செயல்திறனை பிரதிபலிக்கிறது. இந்நிறுவனங்கள் கடந்த ஆண்டு 5.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து, தேசிய பொருளாதாரத்திற்கு ரிம 652.4 பில்லியன் பங்களித்தன. MSME ஏற்றுமதியும் 31.3 சதவீதம் உயர்ந்து, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 14.3 சதவீதமாக இருந்தது.”

வேலைவாய்ப்பு அடிப்படையில், MSMEகள் 8.1 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன – இது 3.1 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட 250,000 தொழிலாளர்களின் அதிகரிப்பு – தேசிய வேலைவாய்ப்புக்கான அவர்களின் பங்களிப்பை 48.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.