கோலாலம்பூரில் மரம் விழுந்ததில் ஆண் பலி, பெண் காயம்

இன்று மாலை புயல் மற்றும் கனமழையைத் தொடர்ந்து கார்மீது மரங்கள் விழுந்ததில் ஒரு ஆண் கொல்லப்பட்டார் மற்றும் ஒரு பெண் காயமடைந்தார்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம், பெர்சியாரான் டுடாமாஸ், தாமன் டுடாவில்(Persiaran Dutamas, Taman Duta) இந்த மரணம் நிகழ்ந்ததாகக் கூறியது.

“சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவரால் சம்பவம் நடந்த இடத்திலேயே 40 வயது மதிக்கத் தக்க அந்த நபர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது,” என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், கெப்போங் பாருவின் ஜாலான் மெட்ரோ பிரிமாவில் விழுந்த மரத்தில் 30 வயதுடைய ஒரு பெண் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் காயமடைந்தார்.

மோசமான வானிலை காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தது தொடர்பான அவசர அழைப்புகள் மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை வந்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

“பொதுப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மீட்பு, சுத்தம் செய்தல் மற்றும் விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீயணைப்பு வீரர்கள் பல பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சம்பவங்களும் துறையால் விரைவாகக் கையாளப்பட்டன, நிலைமை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் துப்புரவு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.