இராகவன் கருப்பையா –
“நாட்டிலுள்ள அடிதட்டு மக்களின் மனங்களைக் கவருவதற்கு 100 ரிங்கிட் போதும் என பிரதமர் அன்வார் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஏழைச் சமூகத்தின் பிரச்சனைகளைக் களைவதற்கு அது போதும் என்று அவர் எண்ணிவிட்டார்.”
இவ்வாறு மலேசிய சோஷலிசக் கட்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி மாணிக்கம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
‘மடானி அரசாங்கம் ஏழ்மையைத் துடைத்தொழிக்கிறதா,’ எனும் தலைப்பில் அண்மையில் நடைபெற்ற பொது விவாதமொன்றின் போது அவர் இவ்வாறு ஆக்ரோஷமாக தனதுக் கருத்துக்களை முன்வைத்தார்.
பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த மேலும் 4 பேர்களும் இவ்விவாத அரங்கில் பங்கேற்றனர்.
“பதினெட்டு வயதிற்கும் மேற்பட்டோருக்கு அரசாங்கம் வழங்கும் தலா 100 ரிங்கிட் உதவித் தொகை அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா,” என தொடர்ந்து தனது கேள்விக் கணைகளை அவர் தொடுத்தார்.
“கடந்த காலத் தலைவர்களைப் போல்தான் அன்வாரும் நடந்து கொள்கிறார். அவருக்கு அசாதாரணமான சிந்தனை கிடையாது.”
“மக்களின் பெரும் பிரச்சனையான வீட்டுடமை பற்றி அவர் சிந்திக்க வேண்டும். விற்பனைக்கு வீடுகள் இருக்கிற போதிலும் நிறைய பேர்கள் அவற்றை வாங்க இயலாமல் பரிதவிக்கின்றனர்,” என்றார் அவர்.
“அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கூட கட்டுப்படுத்தப்படாமல் உச்சத்தில் உள்ளன,” என்று தொடர்ந்து அவர் குறிப்பிட்டார்.
“புதியத் திட்டங்களுக்கு பொருளாதாரம் போதவில்லை என்று கூறும் மடானி அரசாங்கம், பெரும் நிறுவனங்கில் உள்ள வசதி படைத்தோரிடம் வரி வசூலிப்பதில் கவனம் செலுத்தவில்லை,”
“ஆனால் ஜி.எஸ்.டி.(GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளை அமல்படுத்தி அடிதட்டு மக்களின் ஏழ்மை நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது,”
என சிவரஞ்சனி தனது ஆதங்கத்தைத் கொட்டினார்.
“மடானி அரசாங்கம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் புதிய கோணத்தில் படைப்பாற்றலுடன் சிந்திக்க வேண்டும். பெரும் திட்டங்களை மேற்கொள்ளாத வரையில் மாற்றங்களைக் காண முடியாது,” என்றார் அவர்.
“செய்ய வேண்டியக் காரியங்கள் நிறைய உள்ளன என்று ஒரு நீண்டப் பட்டியலை தேர்தலுக்கு முன் நீங்கள் காட்டினீர்கள். ஆனால் தற்பொழுது என்ன நடக்கிறது என்றால், அவற்றில் நிறைவேற்ற முடியாதவற்றிற்குக் காரணங்களைக் கூறுகிறீர்கள்,” என சிவரஞ்சனி சாடினர்.

























