பிரதமர்: மலேசியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூன்று ‘உணர்திறன்’ மிக்க முக்கிய துறைகளைக் கட்டுப்படுத்தாது.

ஆப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ வருகை செய்வதற்கு முன்னதாகவும், அதோடு வரவிருக்கும் G20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாகவும், மலேசியப் பிரதமர், அமெரிக்க நலன்களுக்கு “உணர்திறன் வாய்ந்தவை” என்று கருதப்படும் மூன்று முக்கிய துறைகள்மீதான மலேசியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இவற்றில் அரிதான நிலத்தாதுகள், செமிகண்டக்டர் மற்றும் நாணய மதிப்பீடு போன்ற துறைகள் அடங்கும்.”

சமீபத்திய ஆசியான் உச்சி மாநாட்டில் கையெழுத்தான மலேசியா-அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை விமர்சிப்பவர்களை எதிர்கொள்ள, மூன்று துறைகளுக்குள் நடந்து வரும் திட்டங்களையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் புறக்கணிக்கப்படும் வருடாந்திர உலகளாவிய நிகழ்வான ஜி20 மாநாட்டில் தனது வருகையையும் அன்வார் இப்ராஹிம் மேற்கோள் காட்டினார்.

“இன்று நான் ஆப்பிரிக்காவுக்கு, எத்தியோப்பியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறேன். தென்னாப்பிரிக்கா ஜி20 மாநாட்டிற்காகச் செல்கிறேன், இதை அமெரிக்கா புறக்கணித்துவிட்டது. அமெரிக்கா அதன் அதிகாரிகளை யாரையும் அனுப்பப் போவதில்லை, ஆனால் நாங்கள் செல்கிறோம் – தென்னாப்பிரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்.”

“எனவே தயவுசெய்து இதைக் கருத்தில் கொள்ளுங்கள். அமெரிக்காவுடன் நாம் அதிகமாக நட்பாக இருக்க வேண்டுமா அல்லது அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமா என்பது குறித்து நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் நாம் அமெரிக்காவிடம் சரணடைகிறோம் என்று சொல்வது பொருத்தமானதல்ல,” என்று இன்று காலை அமைச்சர் கேள்வி நேரத்தின்போது அன்வார் கூறினார்.

“நான் குறிப்பிட்ட மூன்று விசயங்களிலும் அமெரிக்கா மிகவும் உறுதியாக உள்ளது, மேலும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதை வலுவாக எதிர்க்கிறது – மேலும் நான், வெளிவிவகார அமைச்சர் அல்லது சர்வதேச வர்த்தக அமைச்சர் என யாராக இருந்தாலும், நாங்கள் எந்தவொரு பிரிக்ஸ் கூட்டத்தையும் தவறவிட்டதில்லை,” என்று அவர் அவாங் ஹாஷிம் (PN-பெண்டாங்) எழுப்பிய ஒரு துணைக் கேள்விக்குப் பதிலளித்தார்.

பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹாஷிம்

வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தேசிய நலன் சார்ந்த விசயங்களில் அமெரிக்காவுடன் “ஆலோசனை” செய்வதில் கவனம் செலுத்தும் பிரிவுகள்மூலம், மலேசியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து அவாங் மீண்டும் மீண்டும் கவலை தெரிவித்தார்.

இருப்பினும், ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி “அமெரிக்காவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்” என்ற சொல், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது முதலீடுகளை மலேசியா மேற்கொள்வதைத் தடுக்கவில்லை என்பதை அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“புக்கிட் மேரா, கிரியான் மற்றும் பினாங்கில் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் சுங்கை பேராக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு பெரிய திட்டம் இப்போது உள்ளது. அந்தத் திட்டம் முற்றிலும் சீனாவிடம் உள்ளது”.

“அமெரிக்காவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமா? நாம் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். இது சீனாவுடன் நாம் ஒத்துழைப்பதைத் தடுக்கிறதா? இல்லவே இல்லை. அதனால்தான், விமர்சனங்கள் அனுமதிக்கப்பட்டாலும் – நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“எங்கள் சகாக்கள் (பின்வரிசை உறுப்பினர்கள்) விமர்சிக்க முடியும், ஆராவ் இன்னும் கடுமையாக விமர்சிக்கிறார் – ஆனால் உண்மை என்னவென்றால், அது (மலேசியா-அமெரிக்க ஒப்பந்தம்) எதற்கும் தடையாக இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு பணவியல் கொள்கைகள்

உள்நாட்டு நாணயக் கொள்கைகளில் அமெரிக்காவின் செல்வாக்கு குறித்த கவலைகள்குறித்து அன்வார், மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் வங்கி நெகாரா இடையேயான வருடாந்திர விவாதங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன என்பதை நினைவுபடுத்தினார்.

“IMF-இன் திசையை யார் நிர்ணயிக்கிறார்கள்? அமெரிக்காதான்… அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம், கருத்துக்களைத் தெரிவிக்கலாம், கண்டனங்கள், விமர்சனங்கள் கொடுக்கலாம், ஆனால் எங்கள் மத்திய வங்கிக்கு அதன் சொந்த கொள்கைகளை வகுக்க இன்னமும் சுதந்திரம் இருக்கிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.

“மலேசியாவிலிருந்து செமிகண்டெக்டர்  தொழில் தயாரிப்புகள் ஏற்றுமதி குறித்து, இங்குச் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதிகளில் அமெரிக்காவின் எதிர்ப்புகள் உள்ளன என்று அன்வார் குறிப்பிட்டார். ஆனால், அந்த வர்த்தக ஒப்பந்தம் பிற உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.”