பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததற்காகக் கண்டிக்கப்பட்ட பின்னர், தனது தந்தையை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் 17 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோலாலம்பூரின் செடாபக்கில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவம்குறித்து திங்கள்கிழமை மாலை 6.42 மணிக்குப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக வாங்சா மாஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
“ஐந்தாம் படிவ மாணவரான சந்தேக நபர், 47 வயதான பாதிக்கப்பட்டவரை அவர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாகக் காயப்படுத்தினார்”.
“சந்தேக நபரால் கத்தியால் செய்யப்பட்ட வெட்டுக்களால் பாதிக்கப்பட்டவரின் முதுகு மற்றும் இடது கையில் காயங்கள் ஏற்பட்டன. அந்த நபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்,” என்று அவர் கூறியதாகச் சினார் ஹரியன் மேற்கோள் காட்டியது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் காயம் ஏற்படுத்தியதற்காகவும், பிரிவு 506 இன் கீழ் குற்றவியல் மிரட்டல் விடுத்ததற்காகவும் அந்த டீனேஜர் இப்போது விசாரணையில் உள்ளார்.
வங்சா மஜு மாவட்ட காவல்துறை தலைவர் லாசிம் இஸ்மாயில்
“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் காவலில் வைக்க நேற்று விண்ணப்பம் செய்யப்பட்டது, நவம்பர் 18 (செவ்வாய்) முதல் நாளை (நவம்பர் 20) வரை மூன்று நாட்களுக்குக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்று லாசிம் மேலும் கூறினார்.
பிரிவு 324 அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தாமாக முன்வந்து காயம் ஏற்படுத்துவதைக் குற்றமாக்குகிறது, இதில் அபராதம், 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை, சாட்டை அடி அல்லது இவற்றின் எந்தவொரு கலவையும் அடங்கும்.
பிரிவு 506, மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், சொத்துக்களை அழித்தல் அல்லது மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்தல், இரண்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல்களை உள்ளடக்கியது.

























