இந்திராவுக்கு உதவ மனமில்லை: சாக்கு போக்கு கூறிய தலைவர்கள்

இராகவன் கருப்பையா – தனது அன்பு மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கடந்த 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியை இந்திரா காந்திக்கு உதவுவதில் அலட்சியப் போக்கை(Tidak Apa Attitude) கொண்டுள்ள நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் வெகுசன மக்களின் கடுமையானக் கண்டனத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.

நீதி, நியாயம், அதன் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு, மதலிய அனைத்து அம்சங்களும் இருட்டுக்குள் உறங்கிவிட்ட நிலையில் இவ்விவகாரத்திற்கு தற்போது அரசியல் தலையீட்டால் மட்டுமே தீர்வுகான இயலும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் அந்தத் தாய்க்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை தலைநகரில் நடைபெற்ற வீதி ஊர்வலம் ஒன்றில் கலந்து கொள்வதிலிருத்து நமது மக்கள் பிரதிநிதிகள் மிகச் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது வேதனையான விஷயம்.

‘ஈங்ஙாட்'(INGAT) எனப்படும் அரசு சாரா இயக்கமொன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்த ஊர்வலத்தில் ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் மட்டுமே ஒரே மக்கள் பிரதிநிதி என்று தெரிகிறது.

‘Nobody is above the law,’ அதாவது ‘சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை,’ என்பது உலகம் முழுவதும் உள்ள பொதுவான நியதியாகும். எதுவாக இருந்தாலும் சட்ட ஒழுங்கு இல்லையென்றால் அது சீர்குலைந்துவிடும்.

ஆனால் நம் நாட்டில் தற்பொழுது சன்னம் சன்னமாக சட்டத்திற்கு மேல் ‘சமயம்’ ஆதிக்கம் செலுத்த முற்படும் சூழல் உருவாகி வருவது வருத்தமளிக்கும் ஒன்றாக உள்ளது.

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன், மதம் மாறிய தமது கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகளைக் காண்பதற்கு, அன்றாடம் ‘வழி மேல் விழி வைத்து’ காத்திருக்கும் இந்திராவின் பரிதாப நிலையே இதற்குச் சான்றாகும்.

அவருடைய முன்னாள் கணவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும், தற்பொழுது 17 வயதை எட்டியுள்ள அவருடைய புதல்வி பிரசன்னா மீட்கப்பட்டு அந்தத் தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெல்லத் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் காவல் துறை கடுகளவும் அத்தீர்ப்பை மதிக்கவில்லை என்பது வேதனை.

Indira Gandhi Action Team is a special task force set up by the Malaysian Hindu Sangam, Hindu Conversion Action Team ( HiCOAT) and the Pertubuhan Hindu Agamam Ani Malaysia.
Reporter SITI FATIMAH

நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி ஒன்று கூடி காவல்துறைத் தலைவர் காலிட்டை அல்லது பிரதமர் அன்வாரை சந்தித்தால் இந்திராவுக்கு நிச்சயம் விமோசனம் கிடைக்கும்.

முன்னாள் சட்டத்துறையமைச்சர் ஸைட் இப்ராஹிம் கூட சமய ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டி இது போன்றதொரு யோசனையை தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

காலிட்டை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வீதி ஊர்வலமானது, தங்களுடைய ஈடுபாட்டை நமது மக்கள் பிரதிநிதிகள் வெளிக் கொணருவதற்கு நல்லதொருத் தளமாக அமைந்திருக்கும்.

ஆனால், “நான் அங்கு செல்ல வேண்டியுள்ளது, எனக்கு இங்கு வேலையுள்ளது, நான் ரொம்ப ‘பிஸி’, எனக்கு வேறு நிகழ்ச்சி உள்ளது,” என பலதரப்பட்ட சாக்கு போக்குகளைக் காரணங்களாக முன்வைத்து அவர்கள் நழுவிக் கொண்டதாகத் தெரிகிறது.

வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் கிளேங் பள்ளத்தாக்கில் உள்ள நமது மக்கள் பிரதிநிதிகளாவது சிறிது முக்கியத்துவம் கொடுத்து இதற்காக கொஞ்சம் நேரத்தை ஒதுக்கியிருக்கலாம்.

‘இது சட்டத்திற்கு மேல் ஆதிக்கம் செலுத்தும் சமய விவகாரம். இதில் கலந்து கொண்டால் எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய பட்டம், பதவி, நியமனம் போன்ற சுகங்களும் சொகுசுகளும் கிடைக்காமல் போகக் கூடும்,’ எனும் அச்சத்தில் அவர்கள் அந்நிகழ்வைத் தவிர்த்தார்களா தெரியவில்லை.

இந்திரா, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் இப்படி ஏனோ தானோ போக்கு நிலவுமா எனும் கேள்வி எழுவதிலும் நியாயம் உள்ளது.

நமது மக்கள் பிரதிநிதிகள் பெரும் திரளாக அன்று சென்றிருந்தால் காலிட் அவர்களைத் தவிர்த்திருக்க வாய்ப்பில்லை. இந்திரா குடும்பத்தினர் உள்பட அதில் கலந்து கொண்டவர்கள் காலிட்டை சந்திக்க இயலாமல் ஏமாற்றமடைந்திருக்க மாட்டார்கள்.

வழக்கறிஞர் மற்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா, சமூக ஆர்வலர் மரினா மகாதீர் மற்றும் ஸைட் இப்ராஹிம், ஆகியோர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்திராவின் இந்த பாசப் போராட்டம் தற்பொழுது உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் விரிவாக பேசப்படுகிறது.

மீள்திறன், துணிச்சல், மற்றும் அசைக்க முடியாத மன உறுதிக்கான அனைத்துலக மகளிர் விருது ஒன்றை அமெரிக்க அரசாங்கம் கடந்த 2018ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கியதை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.