சந்தேகத்திற்குரிய அமைச்சர்களை ஏன் தக்கவைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹம்சா

புதிய அமைச்சரவை வரிசை குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் மேலும் வலுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பொதுமக்களால் செயல்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அமைச்சர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சந்தேகத்திற்குரிய பின்னணி கொண்ட நபர்களின் புதிய நியமனங்களுக்கும் இது பொருந்தும்,” என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹம்சா எந்தப் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சந்தேகத்திற்குரிய பின்னணி குறித்த அவரது கருத்துக்கள், புதிதாக நியமிக்கப்பட்ட துணைச் சமய விவகார அமைச்சர் மர்ஹமா ரோஸ்லியை குறிப்பதாகத் தெரிகிறது. மர்ஹமா, தான் நிறுவிய “Justice for Zara” நிதி தொடர்பான சர்ச்சை உட்பட பல்வேறு விவகாரங்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டவர்.

அந்த நிதியைத் தான் தவறாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மர்ஹமா மறுத்துள்ளார். அந்த நிதி, தான் இதற்கு முன்பு தலைவராக இருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிற கணக்குகளிலிருந்து தனித்தனியாகப் பராமரிக்கப்பட்டது என்றும், அதில் ஸாரா கைரினா மகாதிர் என்பவரின் தாய் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்கள் இருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் தங்கம் தொடர்பான மோசடியுடன் தன்னை இணைத்து கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். தான் அதில் ஒரு பாதிக்கப்பட்டவர்  என்றும், நிறுவனர் கிடையாது என்றும் கூறிய அவர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“இந்த அமைச்சரவை மாற்றம் அரசியல் அழுத்தத்தின் முடிவா, அல்லது (இந்த புதிய நியமனங்கள்) அரசியல் வெகுமதிகளா? என்று கேட்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு.

“குறிப்பாக, உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சகங்கள், இதற்கு முன்பு உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்காக உரக்கக் குரல் கொடுத்த ஒரு கட்சியின் கட்டுப்பாட்டில் இப்போது இருப்பதால், இந்தக் கேள்வி அவசியமாகிறது,” என்று அவர் கூறினார்.

ஹம்சாவின் இந்தக் கருத்துக்கள், பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசனின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன. கூட்டரசுப் பிரதேசங்களின் பொறுப்புகளுக்கு DAP-யின் ஹன்னா யோ மற்றும் GRS-இன் லோ சூ புய் ஆகியோர் நியமிக்கப்பட்டது, முக்கிய நகர்ப்புறங்களில் டிஏபியின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட உத்தி என்று தக்கியுதீன் குற்றம் சாட்டியிருந்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், டிஏபி துணைத் தலைவர் நிகா கோர் மிங், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகத் தக்கவைக்கப்பட்டார்.

ஒரே இனத்தைச் சேர்ந்த மற்றும் ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் கைகளில் நகர்ப்புற அதிகாரத்தைக் குவிப்பது, ஒரு தனி கட்சி நகர்ப்புறக் கொள்கைகளை வடிவமைக்கவும், நிலம் மற்றும் வீட்டுவசதி விவகாரங்களை நிர்வகிக்கவும் வழிவகுக்கும் என்று தக்கியுதீன் கூறினார்.

மேலும், மனிதவள அமைச்சகத்திலிருந்து தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்திற்கு டிஏபியின் ஸ்டீவன் சிம் ‘மூலோபாய ரீதியாக’ மாற்றப்பட்டது குறித்தும் ஹம்சா விளக்கம் கோரினார். அந்த அமைச்சகம் பூமிபுத்ராக்களால் நடத்தப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியின் மையமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

-fmt