“கைவிடப்பட்ட” கிளினிக்கில் விலங்குகள் உயிரிழந்தது தொடர்பான பராமரிப்புப் புறக்கணிப்பு குறித்து கால்நடைத் துறை விசாரணை நடத்தி வருகிறது

பெட்டாலிங் ஜெயாவின் டாமன்சாரா டாமாய்யில் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் தனியார் விலங்கு மருத்துவமனையில் சந்தேகிக்கப்படும் விலங்கு புறக்கணிப்பு குறித்து சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறை (DVS) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் கிடைத்ததைக் குறிப்பிட்டு, விலங்கு நல அதிகாரிகள் குழுவை நேற்று மதியம் 12.30 மணிக்குச் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியதாகத் துறை தெரிவித்துள்ளது.

“ஆய்வில் வளாகத்தில் உள்ள இரண்டு தனித்தனி விலங்கு கூண்டுகளில் ஒரு நாய் மற்றும் ஒரு பூனையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது”.

“பிணங்களின் ஆரம்ப பரிசோதனையின் அடிப்படையில், விலங்குகள் இறந்து ஒன்று முதல் இரண்டு வாரங்கள்வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று நேற்று இரவு ஒரு அறிக்கையில் துறை தெரிவித்துள்ளது.

பின்னர் DVS அதிகாரிகள் மேலதிக பரிசோதனை மற்றும் விசாரணைக்காகச் சடலங்களையும் கூண்டுகளையும் கைப்பற்றினர்.

விலங்குகளுக்குத் தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் நியாயமற்ற முறையில் செய்வதையோ அல்லது செய்யாமல் இருப்பதையோ குற்றமாக்கும் விலங்கு நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1)(e) இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ரிம 20,000 முதல் ரிம100,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நேற்று, Persatuan Haiwan Terbiar Malaysia (SAFM) தனியார் விலங்கு மருத்துவமனையில் “கடுமையான விலங்கு புறக்கணிப்பின் துயரமான நிகழ்வு” என்று விவரித்தது குறித்து எச்சரிக்கை விடுத்தது.

கடந்த சனிக்கிழமை மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்களால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக அந்த அரசு சாரா நிறுவனம் கூறியிருந்தாலும், சட்ட மற்றும் நெறிமுறைப் பொறுப்புகளை மீறுவதாகக் கருதி, “மொத்த புறக்கணிப்புக்கு” மருத்துவமனையின் ஊழியர்களும் நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

“இந்தக் கொடூரமான கொடூரச் செயலைப் புறக்கணிக்க முடியாது. பொறுப்பானவர்கள் முழுமையாகப் பொறுப்பேற்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்,” என்று SAFM இன் செய்தித் தொடர்பாளர் குழுவின் முகநூல் பதிவில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

“இந்தத் துயரச் சம்பவம், விலங்கு நலன் எப்போதும் முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என்பதற்கான ஒரு தெளிவான நினைவூட்டலாகும். விலங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், அவற்றைப் பாதுகாப்பதற்கும் அரவணைப்பதற்கும் தங்களுக்குரிய கடமையைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.”

விலங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு பூனையைக் காப்பாற்றிய சுயாதீன விலங்கு மீட்பர் ஷிமா அரிஸ், இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்பே கைவிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த மருத்துவமனை, கால்நடை பராமரிப்புத் துறையின் (DVS) ஒரு பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.