முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, தனது பதவியைப் பொறுப்பேற்கும் அக்மல் நசீருக்கு ஒரு பாராட்டுச் செய்தியை எழுதியுள்ளார். அதில், புதிய அமைச்சரவை உறுப்பினரின் அர்ப்பணிப்பு மற்றும் இலக்குகளை அடைவதில் உள்ள அவரது மன உறுதியையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
அக்மல் அமெரிக்காவிலிருந்து ஆக்சுவேரியல் சயின்ஸ்(actuarial science) மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றதாகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்திலும் தன்னார்வலராக இருந்ததாகவும் ரஃபிஸி கூறினார்.
“அக்மல் தனது சுயவிவரக் குறிப்பை (CV) இரண்டு முறை எனக்கு மின்னஞ்சல் செய்தார், இரண்டு முறையுமே நான் அவரை நிராகரித்தேன். அவரது சுயவிவரக் குறிப்பு சிறப்பாக இல்லை என்பதற்காக அல்ல, மாறாக அவரது வலுவான கல்வித் தகுதிகளை அவர் வீணாக்குவதை நான் விரும்பவில்லை,” என்று ரஃபிஸி விளக்கமளித்தார்
“அவர் தனது வாழ்க்கையை ஒரு காப்பீட்டுக் கணக்கியலாளராகத் (Actuary) தொடங்கி, நிறைய பணம் சம்பாதித்து, நிறுவன அனுபவத்தைப் பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னிடம் வருமாறு நான் அவருக்கு அறிவுறுத்தினேன்.”
“அந்த நேரத்தில் மலேசியாவில், நீங்கள் எதிர்க்கட்சியுடன் பணிபுரிந்த பதிவுகளைப் பெற்றவுடன், எந்த GLC (அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனம்) அல்லது MNC (பன்னாட்டு நிறுவனம்) உங்களை வேலைக்கு அமர்த்தாது,” என்று அவர் மேலும் கூறினார்.
இருந்தபோதிலும், அக்மலின் “பிடிவாதம்” தனது பிடிவாதத்தைப் போலவே இருப்பதாகக் கிண்டலாகக் குறிப்பிட்ட ரஃபிஸி, அக்மல் மூன்றாவது முறையாகத் தனது சுயவிவரக் குறிப்பை (CV) சமர்ப்பித்ததைக் கண்டு, அவரது “விடாமுயற்சிக்கு வெகுமதி” அளிக்கும் வகையில் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
“யாராவது மீண்டும் மீண்டும் கடுமையாக முயற்சித்தால், அந்த நபர் வெற்றிபெறக்கூடும் என்று அர்த்தம். எனவே, 2009 முதல் அக்மல் எனது அதிகாரியானார். அன்றிலிருந்து, அக்மல் எனது பொறுப்பானார்,” என்று ரஃபிஸி நினைவு கூர்ந்தார்.
புதிய பொருளாதார அமைச்சர் அக்மல் நசீர்
டிசம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவை மறுசீரமைப்பின்படி, அக்மல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் முழு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மறைந்திருக்கும் திறமை
ஜொகூர் பாரு எம்.பி., ரஃபிசியின் நன்கு அறியப்பட்ட கூட்டாளி ஆவார். மே மாதம் பி.கே.ஆர் தேர்தலில் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் அன்வாரின் மகள் நூருல் இஸ்ஸாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரஃபிசி.
ரஃபிசியின் ஆதரவாளராக அடிக்கடி கருதப்படும் அக்மல், அதே தேர்தலின்போது பிகேஆரின் மத்திய தலைமைக் குழுவில் இடம் பெற்றார், முன்பு துணை எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சராகப் பணியாற்றினார்.
தேசிய மேற்பார்வை மற்றும் தகவல் பரிமாற்ற மையத்தை நிறுவியபோது அக்மலின் செயல்திறனைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நடந்த புலனாய்வுப் பணிகளைப் பற்றியும் சிந்தித்த ரஃபிஸி, அக்மலுக்கு ஒரு “மறைக்கப்பட்ட திறமை” இருப்பதைக் கவனித்ததாகக் கூறினார், அதாவது ரகசியமாகச் செல்லும் திறன்.
“நாங்கள் NFC (தேசிய தீவனக் கூட்டுத்தாபனம்) ஊழலை அம்பலப்படுத்தியபோது, அக்மல் ஒரு காலத்தில் எனது கால்நடை வணிக கூட்டாளியாகக் காட்டிக் கொண்டார்”.
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர், 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஜொகூர் பாருவில் PKR கட்சியின் இருப்பை மீட்டெடுப்பதில் அக்மல் ஆற்றிய முக்கியப் பங்கை நினைவு கூர்ந்தார். மேலும், அந்த நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவிடமிருந்து (Umno) கைப்பற்றும் “கடினமான பணியை” (crazy task) அக்மல் விரும்பி ஏற்றதாக ரபிஸி விவரித்தார்.
“அந்த நேரத்தில், ஜொகூர் பாருவில் உள்ள மக்கள் பிகேஆரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, மேலும் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சி ஒருபோதும் வென்றதில்லை… அது பைத்தியக்காரத்தனமான வேலை என்று நான் சொன்னேன், ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார்,” என்று ரஃபிஸி கூறினார்.
2018 பொதுத் தேர்தலின்போது, அக்மல் ஜொகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவின் ஷாஹ்ரிர் அப்துல் சமத்துக்கு எதிராக நேரடிப் போட்டியில் வென்றார், அவர் தொடர்ச்சியாக ஆறு முறை அந்தப் பதவியை வகித்தார்.
பின்னர் 2022 பொதுத் தேர்தலின்போது நான்கு முனைப் போட்டியில் அக்மல் அந்த இடத்தைப் பாதுகாத்தார்.
பதவிகள், பட்டங்கள் ‘தற்காலிகமானவை’
தனது அமைச்சரவை அறிமுகம்குறித்த பேச்சுகுறித்து தெரிவிக்கப்பட்டபோது, அக்மல் தனது கருத்தைக் கேட்டபோது, பதவிகள் மற்றும் பட்டங்கள் எவ்வாறு “தற்காலிகமானவை” என்பது உட்பட பல முக்கியமான விஷயங்களை இளைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நினைவூட்டியதாக ரஃபிஸி மேலும் குறிப்பிட்டார்.
“மக்களிடமிருந்து வரும் பாராட்டுகளும் அவமானங்களும் மறுமையில் நமக்கு உதவாது; நேர்மையான மற்றும் நல்ல வேலை மட்டுமே வெகுமதிகளாக மாறும், ஏனென்றால் மந்திரி மற்றும் துணை மந்திரி பதவிகள் ஒரு பொறி – நாம் அலட்சியமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தால், நாம்தான் சிக்கிக் கொள்வோம்.”
“நாம் விடாமுயற்சியுடன், நேர்மையாக இருந்தால், நமது பணி தாக்கத்தை ஏற்படுத்தினால், அது வெகுமதிகளைப் பெறுவதற்கான ஒரு நல்ல பொறியாக மாறும்” என்று ரஃபிஸி மேலும் கூறினார்.
பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் இப்ராஹிம் சையத் நோ
அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள், குறிப்பாகச் சக பிகேஆர் எம்பி சையத் இப்ராஹிம் சையத் நோவை துணை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக நியமிப்பது குறித்து, ரஃபிஸி தனது “Yang Berhenti Menteri” என்ற பாட்காஸ்டின் நாளைய எபிசோடில் விரிவாகக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர்களின் முந்தைய கருத்துப்படி, ரஃபிஸியின் ஆதரவாளராக அறியப்படும் சையத் இப்ராஹிம் மற்றும் அக்மல் ஆகியோரின் நியமனம், பி.கே.ஆர் (PKR) கட்சித் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டதாகக் கருதப்படும் பிளவுகளைக் களைந்து, கட்சிக்குள் அமைதியை ஏற்படுத்துவதற்கான அன்வாரின் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
























