மூன்று மாதங்களுக்கு முன்பு கம்போங் சுங்கை பாருவில் நடந்த வெளியேற்ற நடவடிக்கையின்போது முன்னாள் டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமானைக் காயப்படுத்தியதாகக் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று இளைஞர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மூவரில் 16 வயது சிறுவனின் குணநல அறிக்கை தயாரிக்கப்படும் வரை, பிப்ரவரி 4 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் நூர்ஃபரஹைன் ரோஸ்லான் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டின்படி, சுலிஸ்மி கட்டளை அதிகாரியாகத் தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, அவரை மிரட்டுவதற்காகத் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக அந்தப் பதின்ம வயதினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றம் செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 10.50 மணி முதல் 11.14 மணிவரை கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு, ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் என்ற இடத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. தண்டனைச் சட்டத்தின் பிரிவு 332 இன் கீழ், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இன்றைய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் ஆறு பேர்மீது, ஒரே நேரத்தில், தேதியில் மற்றும் இடத்தில் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்ட போதிலும், வெளியேற்ற அறிவிப்பை எதிர்க்கும் வகையில் சட்டவிரோதமாகக் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 145 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, 31 வயதான சோபிர்மன் யூனுஸ் (Sopirman Yunus), 19 வயதான ரெசுவான் கமல் அப்துல் ரஹ்மான் (Redzuan Kamal Abdul Rahman), 20 வயதான ஃபல்லா இஸ்லாஹுதீன் ஷா அப்துல் ஃபத்தா (Fallah Islahudden Shah Abdul Fattah) மற்றும் 36 வயதான அசார் சலே (Azhar Salleh) ஆகிய நால்வருக்கும் மெஜிஸ்திரேட் நூருல் இசா ஹசன் பஸ்ரி (Nurul Izzah Hasan Basri) தலா 3,500 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார்.
இருப்பினும், மற்றொரு குற்றவாளியான அரிஃபின் அபு பக்கர், 56, குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார், மேலும் நீதிமன்றம் ஒரு உத்தரவாதத்துடன் ரிம 2,800 ஜாமீன் வழங்கியது, பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு வயதுக்குட்பட்ட குற்றவாளிகளுக்கும், குணநல அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு வசதியாக, பிப்ரவரி 4 ஆம் தேதி தண்டனை விதிக்க நீதிமன்றம் நிர்ணயித்தது. 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு பதின்ம வயதினர்களுக்கும் ஒரு உத்தரவாதத்துடன் தலா ரிம 500 ஜாமீன் வழங்கப்பட்டது.
இன்றைய நடவடிக்கைகள் சிறார்களை உள்ளடக்கியதால், ரகசியமாக வைக்கப்பட்டன.
துணை அரசு வழக்கறிஞர்கள் ஜோசுவா டீ மற்றும் நூருல் பர்ஹானா அருள் ஹிஷாம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர், வழக்கறிஞர்கள் ஃபரித் எமியர் ஃபர்ஹான் மோர்மி, நஜிப் அகமது மற்றும் நூர் அஸ்னிகீன் சுல்தான் ஆகியோர் வாதாடினர்.
செப்டம்பர் 11 அன்று, கம்போங் சுங்கை பாருவில் நடந்த நடவடிக்கையின்போது சுலிஸ்மியின் காயங்கள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு மின்சார இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கையின்போது, நிலைமையைக் கட்டுப்படுத்தும்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசிய பொருள் தாக்கியதில் அவர் தலையில் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் பல வீடுகளை இடிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

























