இடிந்து விழுந்த பாலத்தை உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகப் பிரதமருக்கு கிளந்தான் நன்றி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை அன்று கோலா கிராயில் உள்ள லாடா ரெக்கில் (Lata Rek) இடிந்து விழுந்த தொங்கு பாலத்தை மாற்றி அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு கிளந்தான் மாநில அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது

இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும், குடியிருப்பாளர்களின் அன்றாடப் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் மந்திரி புசார் நசுருதீன் தாவுத் தெரிவித்தார்.

பாலம் மாற்றும் பணிகள் விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் துறையின் செயல்படுத்தல் ஒருங்கிணைப்பு பிரிவு (ICU) மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைக்கக் கோலா கிராய் மாவட்டம் மற்றும் நில அலுவலகத்திற்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் செயல்பாட்டு பொது வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் மத்திய அரசுடன் நெருக்கமாகப் பணியாற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மானெக் உராய் சட்டமன்ற உறுப்பினரும் கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும் நசுருதீன் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்த அவர், அவர்கள் விரைவாகக் குணமடையவும், அனைத்து விஷயங்களும் சுமூகமாகத் தீர்க்கப்படவும் பிரார்த்தித்தார்.

“சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இடிந்து விழுந்த தொங்கு பாலத்தை உடனடியாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்குமாறு அன்வார் நேற்று உத்தரவிட்டார்.

அண்மையில் திருமணமான தம்பதியரின் வரவேற்பு நிகழ்ச்சியில் நிலவிய உற்சாகமான சூழல், விருந்தினர்கள் பயன்படுத்திய ஒரு தொங்கு பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பதற்றமாக மாறியது. இதனால் 50-க்கும் மேற்பட்டோர் லதா ரெக், சுங்கை சாத்தே டாமாய் (Sungai Chatel Damai) ஆற்றில் விழுந்து பாதிக்கப்பட்டனர்.