1MDB ஊழலில் இழந்த மீதமுள்ள ரிம 12 பில்லியனில் ரிம 5 பில்லியனை மீட்க MACC எதிர்பார்க்கிறது என்று தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார்.
இந்த வருடத்திற்குள் ரிம 5 பில்லியன் தொகை கிடைக்குமா என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் ஊழலில் இழந்த சொத்துக்களை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
“முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட மொத்த 1MDB நிதிகள் சுமார் ரிம 42 பில்லியன் ஆகும், மேலும் சுமார் ரிம 30 பில்லியன் சொத்துக்கள் உட்பட நிதியை நாங்கள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளோம்”.
“எனவே, இன்னும் ரிம12 பில்லியன் இருப்பு உள்ளது என்று அர்த்தம், ஆனால் நாங்கள் சுமார் ரிம 5 பில்லியனை மேலும் மீட்க எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் பெரிட்டா ஹரியனிடம் கூறினார்.
மலாய் மொழி நாளிதழின் “போராக் ஹரி இனி” பாட்காஸ்டின் சமீபத்திய எபிசோடில் அவர் பேசினார்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி
டிசம்பர் 26 அன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளிலும், 1MDB ஊழலுடன் தொடர்புடைய 21 பணமோசடி குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
முன்னாள் அம்னோ தலைவருக்கு நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றங்களுக்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் மொத்தம் ரிம 11.38 பில்லியன் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
நிந்தனைக்குரிய 1MDB ஊழல் வழக்கின் தீர்ப்பில், நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்வேரா (Collin Lawrence Sequerah), முன்னாள் பிரதமர் நஜிப்பிற்கும், இந்த ஊழலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் தேடப்படும் தொழிலதிபர் ஜோ லோவிற்கும் (Jho Low) இடையே தெளிவான தொடர்பு (Clear nexus) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஒபைட் மற்றும் லோ-வின் உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட பெருமளவிலான நிதி”
மேலும் கருத்து தெரிவித்த அசாம், Palantir Technologies Inc இயக்குனர் தாரெக் ஒபைட் மற்றும் லோவின் உறவினர்கள் உட்பட பல தனிநபர்களிடமிருந்து ரிம 5 பில்லியன் தொகை வருகிறது என்றார்.
இந்தத் தொகையில், 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரிம 2.4 பில்லியன்) ஒபைடிலிருந்து வரும் என்று அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டில் 1MDB நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமானத்தை அந்த நபர் பெற்று, மாற்றி, பயன்படுத்தியதாக வந்த தகவலின் அடிப்படையில், ஒபைத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட Petrosaudi International Ltd நிறுவனத்தின் 2.5 மில்லியன் பங்குகளின் வர்த்தகத்தைத் தடுக்க அக்டோபர் மாதம் MACC நீதிமன்ற உத்தரவைப் பெற்றது.
தாரெக் ஒபைத்
ஒபைத், Petrosaudi International நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். இந்தச் சவுதி எண்ணெய் நிறுவனம், 2009-ஆம் ஆண்டு 1MDB உடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சியின் மையப்புள்ளியாக விளங்கியது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த ஒப்பந்தத்திலிருந்து பில்லியன் கணக்கான ரிங்கிட் திருடப்பட்டது தெரியவந்தது, இது பல பில்லியன் டாலர் மதிப்புள்ள 1MDB ஊழலின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அந்நேரத்தில், பெட்ரோசவுதி (Petrosaudi) நிறுவனம் சர்வதேச எரிசக்தி சந்தைகளுக்கு 1MDB-க்கு அணுகலை வழங்கும் ஒரு மூலோபாய கூட்டாளியாகச் சித்தரிக்கப்பட்டது.
இருப்பினும், பல அதிகார வரம்புகளில் கசிந்த ஆவணங்கள் மற்றும் விசாரணைகள், லோ மற்றும் அவரது கூட்டாளிகளால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளுக்குப் பில்லியன் கணக்கான பணத்தைத் திருப்பிவிட இந்த முயற்சி ஒரு வாகனமாகப் பயன்படுத்தப்பட்டதைக் காட்டியது.
‘சுவிட்சர்லாந்தும்கூட உதவியது’
லோவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான கணக்குகள் விரைவில் மலேசிய அரசாங்கத்திடம் திருப்பித் தரப்படும் என்று அசாம் கூறினார்.
லோ டேக் ஜோ
இந்த விவகாரம்குறித்து MACC அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அவர் மற்ற நாடுகளின் ஒத்துழைப்பைப் பாராட்டினார், சுவிட்சர்லாந்து போன்ற ஒத்துழைக்கக் கடினமானவை என்று பெயர் பெற்ற நாடுகள் கூட, தற்போது கூட்டுப்பணிகளுக்காக “கதவைத் திறந்துவிட்டுள்ளன” முன்வந்துள்ளன என்று அவர் கூறினார்.
“நான் சொன்னது போல், எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”.
“பல தனிநபர்களின் ஈடுபாட்டுடன், MACC முதலில் ரிம 2.8 பில்லியன் மதிப்புள்ள 1MDB நிதியை மீட்டெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளிடமிருந்து சொத்துக்களை மீட்டெடுப்பது சம்பந்தப்பட்டதால், இந்தச் செயல்முறை எளிதான ஒன்றல்ல என்று அவர் கூறினார்.
70 சதவீத மீட்பு
அடைய வேண்டிய முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் எதுவும் இல்லை என்று அவர் கூறிய போதிலும், சுமார் 70 சதவீத மீட்பு விகிதம் ஒரு நல்ல முயற்சி என்று அவர் கருத்து தெரிவித்தார்.
மலேசியாகினியின் ஒரு விரைவான கணக்கீட்டின்படி, ஊழலில் இழந்த ரிம 42 பில்லியனில் 70 சதவீதம் ரிம 29.4 பில்லியனாகும், இது கமிஷன் மீட்டெடுத்த ரிம 30 பில்லியனை விடச் சற்று குறைவு. இதன் பொருள் MACC ஏற்கனவே இலக்கை அடைந்துவிட்டது என்பதாகும்.
இருப்பினும், இந்த நிதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) எதிர்கொண்ட சிரமங்களில் ஒரு பகுதி, சிக்கலான பணப்பரிமாற்ற முறைகளே என்று அசாம் கூறினார்.
“இது வெறும் மக்களின் வீடுகளுக்குச் சென்று பணத்தைப் பறிமுதல் செய்வது மட்டுமல்ல.”
“பல்வேறு பினாமி பெயர்களில் உள்ள கணக்குகளின் மூலம் இழந்த பணத்தைக் கண்டறிவதும் இதில் அடங்கும்,” என்று அவர் விளக்கினார்.

























