கட்சியை விட்டு விலகியவர்கள் மீண்டும் இணைவதை ஆய்வு செய்து அனுமதி வழங்க ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (அம்னோ) ஒரு குழுவை அமைக்கும்.
கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இணைய விரும்பினால், அவர்களுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அம்னோவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இது நாம் மீண்டும் ஒன்றிணைவதற்கான ஒரு இல்லம். யாராவது வழிதவறிச் சென்றாலோ அல்லது தடுமாறினாலோ, அவர்கள் மீண்டும் திரும்பலாம். நம்முடைய ‘குடும்ப உறுப்பினர்களை’ மீண்டும் வரவேற்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும்” என்று கூறினார்.
2022 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, முன்னாள் இளைஞரணித் தலைவர் கைரி ஜமாலுதீன், முன்னாள் பொதுச் செயலாளர் அன்வார் மூசா மற்றும் சிலாங்கூர் அம்னோவின் முன்னாள் தலைவர் நோ ஒமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களை அம்னோ கட்சியிலிருந்து நீக்கியது.
அன்வார் மூசா பாஸ் கட்சியிலும், நோ ஒமார் பெர்சத்து கட்சியிலும் இணைந்தனர். அதேசமயம், கைரி ஜமாலுதீன் வானொலித் தொகுப்பாளராகவும், ‘கெலுவார் செகெஜாப்’ (Keluar Sekejap) என்ற அரசியல் பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் இணைத் தொகுப்பாளராகவும் பொதுத்தளத்தில் இயங்கி வருகிறார்.
ஜாஹித் ஹமிடியின் ஆசியுடன் நேற்று அம்னோவின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட கைரி ஜமாலுதீன், உணர்ச்சிகரமான முறையில் கட்சிக்குத் திரும்பினார். அவர் மீண்டும் அம்னோவில் சேர விண்ணப்பிப்பாரா என்பதைத் தெளிவாகக் கூறவில்லை என்றாலும், “நல்ல விஷயங்கள்” நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், “செய்ய வேண்டியதைச் செய்வேன்” என்றும் கூறினார்.
இதற்கிடையில், அம்னோவிலிருந்து பெர்சத்து கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் வரவேற்க ஜாஹித் விரும்புவதாக அம்னோ தலைவர் புவாட் சர்க்காஷி நேற்று தெரிவித்தார். தற்போது பெர்சத்து கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
2018-இல் பாரிசான் நேஷனல் ஆட்சி வீழ்ந்த பிறகு, அம்னோவிலிருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சத்து கட்சிக்குத் தாவினர். அவர்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுடின், சபா பெர்சத்து தலைவர் ரொனால்ட் கியாண்டி மற்றும் பெர்சத்து மகளிர் அணித் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் ஆகியோர் முக்கியமானவர்கள்.
-fmt

























