ஊழல் விசாரணை: மூத்த இராணுவ அதிகாரிகள்மீது குற்றவியல் வழக்குகள் தொடர MACC முன்மொழிவு

இராணுவ கொள்முதல் மற்றும் நிதியுதவி தொடர்பான ஊழல் தொடர்பான விசாரணைகளுக்கு உட்பட்ட ஆயுதப்படைகளின் குறைந்தது மூன்று மூத்த அதிகாரிகள்மீது MACC குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்மொழியும்.

இது முன்னாள் இராணுவத் தலைவர் ஹபிசுதீன் ஜன்தனுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஒரு வழக்கு மற்றும் பல மூத்த இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஒரு தனி விசாரணையுடன் தொடர்புடையது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, அதன் விசாரணை அதிகாரிகள் அடுத்த வாரத்திற்குள் தங்கள் விசாரணைகளை முடித்து, தங்கள் கண்டுபிடிப்புகளைத் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி

“இந்த வழக்குகளில் சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் உடனடியாக ஊடகங்களுக்கு அறிவிப்பேன்”.

“முதல் வழக்கில், ஒன்று அல்லது இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராகவும், இரண்டாவது வழக்கில் குறைந்தது இரண்டு நபர்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை முன்மொழியலாம்”.

“அவர்கள் அனைவரும் இராணுவ அதிகாரிகள்,” என்று அவர் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் சந்தேக நபர்கள்மீது குற்றம் சாட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அசாம் நிராகரிக்கவில்லை, துணை அரசு வழக்கறிஞர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

கடந்த வாரம், இராணுவ கொள்முதல் திட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை எளிதாக்குவதற்காக, ஹஃபிசுதீன் மற்றும் அவரது இரண்டு மனைவிகளை MACC காவலில் வைத்தது.

ஹஃபிசுதீன் மற்றும் அவரது துணைவர்களைத் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தம்பதியினரும் தடுத்து வைக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

கைதுகள் மற்றும் பறிமுதல்கள்

இன்றுவரை, இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 23 நபர்களை MACC கைது செய்து 30 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

அதிகாரிகள் தங்கள் விசாரணையின்போது ரிம 11.4 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளனர், இதில் ரிம 4.4 மில்லியன் ரொக்கம், ரிம 2.3 மில்லியன் மதிப்புள்ள 26 சொகுசு கடிகாரங்கள், ரிம 2.5 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் உள்ளிட்டவை அடங்கும்.

விசாரணைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 75 வங்கிக் கணக்குகளையும் அது முடக்கியது, மொத்தம் ரிம 32.5 மில்லியன்.

“இந்தச் சொத்துக்கள் இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு இல்லத்தில், அது ஒரு பாதுகாப்பான மறைவிடம் (safe house) என்று கூறப்படுகிறது, மற்றொன்று திரங்கானுவின் பெசுட்டில் உள்ள ஒரு வீடாகும்,” என்று அசாம் கூறினார்.

இருப்பினும், ஒப்பந்தங்களின் தன்மை மற்றும் அவற்றின் பட்ஜெட்டின் அளவுகுறித்து கேட்டபோது, ​​ஊழல் தடுப்பு அதிகாரி கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

மேலும் கைதுச் செய்யப்பட்டவர்கள்

இரண்டாவது வழக்கைப் பொறுத்தவரை, ஆயுதப்படை நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் இராணுவ கொள்முதலில் ஏற்பட்ட ஊழல் தொடர்பான விசாரணையை எளிதாக்குவதற்காக நான்கு மூத்த இராணுவ அதிகாரிகளையும் ஒன்பது பொதுமக்களையும் கைது செய்துள்ளதாக அசாம் கூறினார்.

இந்த வாரத் தொடக்கத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தடுத்து வைக்கப்பட்ட இரண்டு “உயர் மூத்த அதிகாரிகளும்” அவர்களில் அடங்குவர்.

இருப்பினும், அக்டோபரில் தொடங்கிய இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையை முடிக்க மட்டுமே MACC தேவைப்பட்டதால், இருவரும் காவலில் வைக்கப்படவில்லை என்று அசாம் கூறினார்.

“விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது,  அடுத்த வாரம் இதை முடிக்க முடியும். விசாரணைக் கட்டுரையை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

MACC 35 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், Mercedes A180 Class மற்றும் Toyota Vellfire உட்பட ரிம 4.7 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு சொத்துக்களையும், ரிம 1.3 மில்லியன் ரொக்கத்தையும், ரிம 1.7 மில்லியன் மதிப்புள்ள 66 தங்கத் தகடுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் அசாம் கூறினார்.