பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவிக்கு துவான் இப்ராஹிம் தகுதியானவர் என பாஸ் ஆன்மீகத் தலைவர் ஆதரவு

பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவிக்கு துவான் இப்ராஹிமை பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் ஆதரிக்கிறார்.

ஜனவரி 1-ஆம் தேதி பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியாக உள்ள பெரிக்காத்தான் தலைவர் பதவிக்கு, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மிகவும் தகுதியானவர் என்று ஹாஷிம் ஜாசின் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் உள்ளிட்ட மற்ற முன்னிலை வேட்பாளர்களின் தகுதிகளை அவர் மறுக்கவில்லை என்றாலும், ஒரு சிறந்த தலைவருக்கான இஸ்லாமிய போதனைகளின் நான்கு முக்கிய அளவுகோல்களை துவான் இப்ராஹிம் பூர்த்தி செய்வதாக ஹாஷிம் கூறினார்.

அவர் குறிப்பிட்ட அந்த நான்கு அளவுகோல்கள்: இறைவனிடம் பயபக்தி, இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றுதல், மறுமை வாழ்விற்கானத் தயார்நிலை மற்றும் தன்னிறைவு அடைதல் ஆகியவையாகும்.

“பெரிக்காத்தான் தலைவர் பதவிக்கு துவான் இப்ராஹிம் மிகவும் பொருத்தமான வேட்பாளர். அவர் ஒரு நிதானமான தலைவர்; அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார் மற்றும் கட்சிக்கு எவ்வித சிக்கல்களையும் ஏற்படுத்த மாட்டார்,” என்று ஹாஷிம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெர்லிஸ் அரசியல் குழப்பத்தினால் மந்திரி பெசார் பதவி பாஸ் கட்சியிடமிருந்து பெர்சத்து கட்சிக்கு மாறியதால் பாஸ் மற்றும் பெர்சத்து இடையே ஏற்பட்டுள்ள கசப்பான உறவைச் சீர்செய்யும் ஆற்றல் துவான் இப்ராஹிமுக்கு உண்டு என்றும் அவர் நம்புவதாக தெரிவித்தார். பாஸ் கட்சியின் படிநிலையில், சம்சூரியை விட பகாங் எதிர்க்கட்சித் தலைவரான துவான் இப்ராஹிம் மூத்தவர் என்பதையும் ஹாஷிம் சுட்டிக்காட்டினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பெரிக்காத்தான் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், துவான் இப்ராஹிம் மற்றும் சம்சூரி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஹாடி அவாங்கின் மருமகனும் சுங்கை பூலோ பாஸ் தலைவருமான ஜஹாருடின் முஹம்மது, துவான் இப்ராஹிமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, சம்சூரியைப் பரிந்துரைப்பது பாஸ் கட்சிக்கும் மலேசியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார். எனினும், ஜஹாருடினின் இந்தக் கூற்று யதார்த்தத்திற்குப் புறம்பானது என்றும் அது பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் கூறி துவான் இப்ராஹிம் சம்சூரிக்கு ஆதரவாகப் பேசினார்.

 

-fmt