பாரிசானா? பெரிக்காத்தானா? இக்கட்டான நிலையில் ம.இ.கா

இராகவன் கருப்பையா- ம.இ.கா. தற்போது இக்கட்டான ஒரு நிலையில் உள்ளது என்பதைவிட ‘இரண்டும் கெட்டான்’ சூழலில் பரிதவிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானில் இணைவதற்கான அதன் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என முன்னாள் பிரதமர் முகிடின் செய்த திடீர் அறிவிப்பானது எல்லா தரப்பினரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“பெரிக்காத்தானில் இணைவதற்கு நாங்கள் விண்ணப்பிக்கவில்லை, விளக்கம்தான் கோரியிருந்தோம்,” என ம.இ.கா. ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்தது.எனினும் ‘நெருப்பில்லாமல் புகையாது,’ அல்லவா! விண்ணப்பம் அனுப்பாத ஒரு கட்சியை எப்படி பெரிக்காத்தான் ஏற்றுக் கொள்ளும்? என்னும் கேள்வி எழுவது நியாயம்தானே!

ஆக திரை மறைவில் நடந்துள்ள விஷயங்களை முகிடின் தற்போது அப்பட்டமாக போட்டுடைத்து ம.இ.கா.வை ‘இரண்டும் கெட்டான்’ நிலைக்குத் தள்ளியுள்ளார் என்றே நமக்குத் தோன்றுகிறது.

ம.இ.கா.வின் இக்கட்டான நிலையை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் உள்ளது தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர்  ஸம்ரி அப்துல் காடிர் விடுத்த ஒரு அறிக்கை.

தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் ம.இ.கா. தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. நேர சிக்கலால் ம.இ.கா.வினர் பங்கேற்கவில்லை என ஸம்ரி சமாதானம் கூற முற்படுகிற போதிலும், அக்கட்சிக்காக அவர் சப்பக்கட்டுகிறார் என்று நன்றாகவே தெரிகிறது.

தங்களுக்கு அரசாங்கப் பதவிகள் கிடைக்காதலால் பாரிசானை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அண்மைய மாதங்களாக ம.இ.கா. அறிவித்து வருகிறது.

இருந்த போதிலும், ‘அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா,’ எனும் நிலைப்பாட்டில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் அக்கட்சி தடுமாறிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

குறிப்பாக கடந்த வார இறுதியில் நடைபெற்ற அம்னோ பேராளர் மாநாட்டில் அதன் தலைவர் அஹ்மட் ஸாஹிட் எல்லா கட்சிகளையும் சுமூகமாக அரவணைப்பதைப் போல பேசினார்.

அதனைத் தொடர்ந்து, “நாங்கள் பாரிசானை விட்டு வெளியேற மாட்டோம்,” என ம.சீ.ச. திடீர் அறிவிப்பு ஒன்றை செய்து பல்டியடித்தது. இதனால் ம.இ.க. தனித்து விடப்பட்ட ஒரு சூழலுக்கு உள்ளானது.

அநேகமாக ம.இ.கா.வும் அதே போலான ஒரு முடிவெடுக்கும் என அடிமட்ட கட்சி உறுப்பினர்கள் எண்ணியிருந்த வேளையில்தான் முஹிடினின் அறிவிப்பு பல்வேறு ஆருடங்களை புரட்டிப் போட்டுள்ளது.

பெரிக்காத்தானில் இணைந்தால், அந்தக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றினால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ம.இ.கா.வுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அன்வாரின் ஆதிக்கத்தில் உள்ள பக்காத்தானில் ஒன்றுமே நிலையில்லை. இதனையும் ம.இ.கா. உணர்ந்துள்ளது.

ஆக அந்தப்பக்கம் ஒரு கால் இந்தப்பக்கம் ஒரு காலாக தடுமாறிக் கொண்டிருக்கும் அக்கட்சி அதன் முடிவை அறிவிக்க  அவசரபடவேண்டிய அவசியமில்லை. இன்னும் சற்று ஆழமான விவாதத்தை முன்வைக்க முயலவேண்டும்.

அரசியல் சந்தர்ப்பவாதியாக சிந்திக்காமல் சமுதாயத்தின் ஒரு மூத்த கட்சி என்ற நிலையில் இந்தியர்களின் சமூக அரசியல் பொருளாதார அமைப்பு சூழலை மேம்படுத்தும் கொள்கைளை கொண்டதோடு செயலாக்க வழிமுறைகளை கையாளும்  கூட்டணியை பரிசீலிக்கலாம்.