காதிர்: அழியா மை மட்டும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யாது

அழியா மையை அறிமுகம் செய்வது மட்டும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதி செய்யாது. தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகளும் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அம்னோ மூத்த யஉறுப்பினருமான அப்துல் காதிர் ஷேக் பாட்சி கூறுகிறார்.

அரசியல் களத்தில் இரு புறத்திலும் உள்ள கட்சிகளுக்கு ஊடகங்களில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அரசு சேவை அரசியல் ரீதியில் நடு நிலை வகிக்க வேண்டும். பண அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என அவர் அண்மையில் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

காதிர் தாம் சந்தித்த கிராமவாசி ஒருவருடைய கதையையும் சொன்னார். “டிஏபி தீய கட்சி அது வெற்றி பெற்றால் மன்னராட்சி முறையை ஒழித்து விரும்புகிறது,” என அந்த கிராமவாசி காதிரிடம் கூறினார்.

அந்தத் தகவல் வானொலி, பத்திரிக்கைகளிலிருந்து தமக்குக் கிடைத்ததாக அந்த கிராமவாசி கூறினார்.

“எல்லா வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ஒரே குரலைத்தான் ஒலி, ஒளிபரப்புகின்றன.”

சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கு அது நல்ல சூழ்நிலை அல்ல. ”

“நான் தகவல் அமைச்சராக இருந்த போது அதனை உணர்ந்தேன். ஆனால் அதனைச் செய்வதற்கான வலிமை என்னிடம் இல்லை.”

அந்த நிலையைச் சரி செய்ய இரண்டு தரப்புக்களும் நீண்ட கால குறுகிய தீர்வுகளை ஆராய வேண்டும் என்றும் காதிர் சொன்னார்.

பண அரசியல் தேவை இல்லை

தேர்தலின் போது அரசு சேவை நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் காதிர் விரும்புகிறார்.

“கிராமங்களில் பல்வேறு அரசாங்க அமைப்புக்களின் அதிகாரிகள் தங்கி மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து நிகழ்வுகளை நடத்தி ஒரு தரப்புக்கு மட்டும் பிரச்சாரம் செய்யக் கூடாது.”

“அந்த நிலை சரி செய்யப்பட வேண்டும்.”

அத்துடன் வாக்குகளை வாங்குவதற்குப் (அப்பட்டமாக ரொக்கம் விநியோகம் செய்யப்படுவதும்) தடை செய்யப்பட வேண்டும் என்றும் காதிர் விரும்புகிறார்.

“அது மிகவும் அசிங்கமானது. நாகரீகமில்லாதது,” என்றார் அவர்.

இடைத்தேர்தல்களில் தாம் உதவி செய்த போது விநியோகம் செய்யப்படுவதற்காக கட்டுக்கட்டாக நோட்டுக்கள் தம்மிடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்

“நான் சொன்னேன். அதனைச் செய்ய மாட்டேன். மற்றவர்களிடம் கொடுங்கள். நான் என் வாழ்நாளில் அரசியலுக்குப் பணத்தைப் பயன்படுத்தியது இல்லை,” என்றும் அந்த 73 வயது அரசியல்வாதி சொன்னார்.

அரசியலுக்குப் பணம் அவசியம் என்று கூட அமைச்சர்கள் தம்மிடம் கூறியதாகவும் காதிர் சொன்னார். ஊழலை நியாயப்படுத்துவதற்கு அது ஒரு வழி என்றும் அதிகார அத்துமீறல் என்றும் Angkatan Amanah Merdeka என்ற அமானா அமைப்பின் துணைத் தலைவருமான காதிர் குறிப்பிட்டார்.