என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை நடத்துவதால் அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் தனது வர்த்தகம் “வழக்கம் போல நிகழ்வதாக” என்எப்சி கூறுகிறது.
“வாடிக்கையாளர்கள் மாட்டிறைச்சிக்கு வழங்கிய எல்லா அளிப்பாணைகளும் பூர்த்தி செய்யப்படும். பாதிப்பு ஏதுமில்லை,” என அதன் தலைமை நிர்வாக அதிகாரி வான் ஷாஹினுர் இஸ்மிர் சாலே கூறினார்.
2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் என்எப்சி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்றும் அது விநியோகத்தையும் கொள்முதலையும் பாதிக்கவில்லை என்றும் வான் ஷாஹினுர் இஸ்மிர் சொன்னார்.
“நாங்கள் தொடர்ந்து சேவை செய்து வருவோம் என நான் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் உறுதி கூற விரும்புகிறேன்.”
பேரங்காடிகள், கடைத் தொகுதிகள், மினி மார்க்கெட்டுகள், சந்தைக் கூடங்கள், பதனீடு செய்யப்பட்ட இறைச்சியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை உட்பட 160க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு என்எப்சி மாட்டிறைச்சியை விநியோகம் செய்கிறது என்றும் அவர் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
நாட்டுக்குத் தேவையான மாட்டிறைச்சி இலக்கை பூர்த்தி செய்யும் பொருட்டு நெகிரி செம்பிலான் கெமாஸில் இயங்கும் தேசிய விலங்குக் கூட நிறுவனம் தொடர்ந்து 4,500க்கும் மேற்பட்ட கால் நடைகளை பராமரித்து வரும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட பல்வேறு அதிகாரத்துவ அமைப்புக்கள் என்எப்சி மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளதால் அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார்.