பெர்சத்து கட்சி வாக்காளர்களை ஈர்ப்பதில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு இன்னும் முக்கியமானதாகவே இருக்கிறது என்ற கூற்றுகளை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காசி மறுத்துள்ளார். குறிப்பாக, அதன் தலைவர் முகிதின் யாசினுக்கும், பெர்சத்து கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் முகமதுவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்களுக்குப் பிறகு, பெர்சத்து ஏற்கனவே தன் ஈர்ப்பை இழந்துவிட்டது என்று புவாட் கூறினார்.
அம்னோவை எதிர்ப்பதற்காக மகாதிரும் முகியிதினும் இணைந்து 2016-இல் பெர்சத்து கட்சியைத் தொடங்கினர். நாடாளுமன்றத்தில்முகிதின் அரசாங்கத்தை ஆதரிக்க மறுத்து, எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தேர்ந்தெடுத்ததால், மே 2020-இல் மகாதிர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற ‘ஷெரட்டன் மூவ்’ நடவடிக்கைக்குப் பிறகு முகியிதின் பிரதமரானார். அதன் விளைவாக, அப்போதைய பெர்சத்து தலைவரான மகாதிர் தனது பிரதமர் பதவியைத் துறந்தார்; அத்துடன் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமும் கவிழ்ந்தது. “அப்போதிருந்தே, பெர்சத்து கட்சி பாஸ் கட்சியை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் மோசமடைந்து வரும் மோதல் காரணமாக, பெர்சத்துவின் ஈர்ப்புத் தன்மை மேலும் குறையவே செய்யும்” என்று புவாட் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சி உண்மையிலேயே இன்னும் ஈர்ப்பான ஒரு கட்சியாக இருந்தால், அதன் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனும், அவருடன் அணிவகுத்து நிற்கும் பலரும் கட்சியின் தலைமைக்கு எதிராகத் திரும்பியிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகள் இன்னும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் பலத்தைக் கொண்டுள்ளன என்றும், அவை தங்களின் ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என்றும் கூறிய திரங்கானு பெர்சத்து தலைவர் ரசாலி இத்ரிஸுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே புவாட் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
வாக்களிக்கத் தீர்மானிக்காத நடுநிலை வாக்காளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் வாக்காளர்களை பெர்சத்து கட்சியால் ஈர்க்க முடியும் என்றும், இது பாஸ் கட்சியின் பலமிக்க தேர்தல் கட்டமைப்பு மற்றும் பரந்த தேர்தல் பிரச்சார அனுபவத்திற்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் ரசாலி கூறியிருந்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் முகியிதினின் கட்சி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் சாத்தியக்கூறுகளுடன், பெர்சத்து உடனான தனது உறவை பாஸ் கட்சி மறுபரிசீலனை செய்து வரும் சூழலில் இவருடைய இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
-fmt
























