ஜொகூருக்கான கூட்டரசு உதவி விஷயத்தில் கணக்குப் பார்க்க வேண்டாம் என அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் நேசனல் மாநிலத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எடுத்த முடிவைத் தொடர்ந்து நிலவி வரும் அரசியல் வாக்குவாதங்களுக்கு மத்தியில், ஜொகூருக்கான கூட்டரசு ஒதுக்கீடுகள் விஷயத்தில் “அதிகம் கணக்குப் பார்க்க வேண்டாம்” என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ஹபிஸ் அரிபின் கூறுகையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குறிப்பிட்ட 14.6 பில்லியன் ரிங்கிட் கூட்டரசு நிதியில், சுல்தானா அமினா 2 மருத்துவமனை மற்றும் எலிவேட்டட் அட்டானமஸ் ரேபிட் டிரான்சிட் அமைப்பு போன்ற அறிவிக்கப்பட்ட ஆனால் இன்னும் செயல்படுத்தப்படாத திட்டங்களும் அடங்கும் என்றார்.

ஒரு திட்டத்தை அறிவிப்பது என்பது, அதற்கான நிதி வழங்கப்பட்டு அது களத்தில் செலவழிக்கப்படுவதற்குச் சமமாகாது என்றும் அவர் கூறினார்.

கூட்டரசு (அரசாங்கத்தின்) பங்களிப்புகளை யாரும் மறுக்கவில்லை, ஆனால் ஜொகூர் ‘அதிகமாக உரிமை கோருகிறது’ மற்றும் அதற்கு நன்றி உணர்வு இல்லை என்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காக, ஜொகூரில் மேற்கொள்ளப்படும் கூட்டரசு மேம்பாடு மற்றும் செலவினங்களை ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்.

இந்தக் கணக்குகளை இப்போது ஏன் கொண்டு வர வேண்டும்? அரசியல் ஒத்துழைப்பை மேம்பாட்டிற்கான ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த முயல்கிறீர்களா? அப்படி இருந்தால், நேரம் வரும்போது ஜொகூர் மக்கள் தங்களுடைய சொந்தக் கணக்கைப் போடுவார்கள் என்று நான் நினைக்கிறேன், என்று அவர் முகநூலில் பதிவிட்ட காணொளியில் கூறினார்.

ஜொகூரில் நடைபெற்ற பக்காத்தான் மாநாட்டில், மாநிலத்தின் சமீபத்திய மேம்பாடு என்பது மாநில அரசாங்கத்தால் மட்டுமே அல்லாமல், பெருமளவிற்கு கூட்டரசு முன்முயற்சிகளால் உந்தப்பட்டது என்று கூறியிருந்த ஜசெக பொதுச் செயலாளர் லோக் சியூ பூக்கிற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஜொகூர் பாரிசான் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹபிஸ் காசி அறிவித்ததைத் தொடர்ந்து, பாரிசான் மற்றும் பக்காத்தான் தலைவர்களுக்கு இடையே இந்த பரஸ்பர வாக்குவாதம் தொடங்கியது.

ஜொகூரில் அம்னோ தனித்துப் போட்டியிடும் திட்டத்துடன் முன்னேறினால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று ஜசெக இளைஞர் பிரிவு அதன் பிறகு கூறியுள்ளது.

பாரிசான் இளைஞர் பிரிவின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஹபிஸ் கூறுகையில், குறிப்பிடப்பட்ட 14.6 பில்லியன் ரிங்கிட் தொகையில் அரசு ஊழியர்களின் சம்பளம், அத்துடன் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நிர்வாகம் போன்ற செயல்பாட்டுச் செலவுகளும் அடங்கும் என்றார்.

இவை அனைத்தும் ஜொகூரில் மேற்கொள்ளப்படும் கூட்டரசு அரசாங்கத்தின் செலவினங்களே தவிர, இவற்றை மாநிலத்திற்கு நேரடியாக மாற்றப்பட்ட ரொக்கப் பணம் போல சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம், என்று அவர் மேலும் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் 203.9 பில்லியன் ரிங்கிட் நேரடி வரி வசூலில், ஜொகூர் மாநிலம் மட்டுமே கிட்டத்தட்ட 20 பில்லிய ன் ரிங்கிட்டைப் பங்களித்துள்ளதாக உள்நாட்டு வருவாய் வாரியத்தின் தரவுகளைக் குறிப்பிட்டு, ஜொகூர் நாட்டின் வருவாய்க்கு ஒரு முக்கியப் பங்களிப்பாளராக உள்ளது என்றும் ஹபிஸ் சுட்டிக்காட்டினார்.

 

-fmt