‘ஷாரிஸாட் குடும்பம் என்எப்சி-யின் 600,000 ரிங்கிட்டைப் பயன்படுத்தியது’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலுக்கு பொறுப்பேற்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக பிகேஆர் அந்த என்எப்சி நிதிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இன்னொரு அத்துமீறலை அம்பலப்படுத்தியுள்ளது.

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் 2009ம் ஆண்டு கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மொத்தம் 593,500 ரிங்கிட் செலவு செய்துள்ளனர். அதற்கான பணம் என்எப்சி நிதிகளிலிருந்து எடுக்கப்பட்டதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறினார்.

என்எப்சி விவகாரத்தை அம்பலப்படுத்துவதற்கு அந்தக் கட்சியில் ராபிஸி பொறுப்பேற்றுள்ளார்.

என்எப்சி-யில் நிர்வாகப் பதவிகளில் இருந்து வந்த அந்த நால்வரும் 2009ம் ஆண்டு 122,402 ரிங்கிட்டுக்கும் 182,525 ரிங்கிட்டுக்கும் இடையிலான செலவுகளுக்கு என்எப்சி கணக்கில் உள்ள கிரடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளனர் என அவர் சொன்னார்.

ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில் (என்எப்சி தலைவர்), அவர்களுடைய 31 வயது புதல்வர் வான் ஸாஹினுர் இஸ்மிர் (நிர்வாக இயக்குநர்) இன்னொரு புதல்வரான 27 வயது வான் ஸாஹினுர் இஸ்ரான் ( தலைமை நிர்வாக அதிகாரி), 25 வயது புதல்வி வான் இஸ்ஸானா பாத்திமா (இயக்குநர்) ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

“என்எப்சி-யில் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களுக்கு தாமும் அமைச்சரவையில் உள்ள அவரது சகாக்களும் முழுப் பொறுப்பேற்பதாக நஜிப் கூறும் வரையில் நாங்கள் தொடர்ந்து ஊழல்களை அம்பலப்படுத்தி வருவோம்,” என ராபிஸி இன்று விடுத்த அறிக்கை கூறியது.

TAGS: