தனது பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை அமல்படுத்தாததற்காக தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே 2.0 தேர்தல் ஆணையத்தையும் (இசி), நாடாளுமன்ற சிறப்புக் குழுவையும் (பிஎஸ்சி) கடுமையாக சாடிற்று.
அதன் எட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 41 பரிந்துரைகளில் பிஎஸ்சி நான்கு பரிந்துரைகளை மட்டும் அதன் இடைக்கால அறிக்கையில் சேர்த்துகொண்டுள்ளது.
பெர்சேயின் மூன்று பரிந்துரைகளை இசி அதன் மூன்று சீர்திருத்தங்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது பெருத்த ஏமாற்றமளிப்பதாகும் என்று பெர்சே கூறுகிறது.
பெர்சேயின் பரிந்துரைகளை மட்டுமல்லாமல் பிஎஸ்சியின் பரிந்துரைகளையும் அமலாக்கம் செய்வதற்கான ஈடுபாடும் ஆர்வமும் காட்டாமல் இசி இருந்து வருவது தேர்தல் முறையில் மிக அவசியமாக தேவைப்படும் சீர்திருத்தங்களைக் கொணர்வதற்கான அரசியில் திண்மையை அது கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
“தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்தவும் வாக்காளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பொறுப்புகளையும் பெற்றுள்ள ஓர் அரசமைப்புச் சட்ட அமைப்பு என்ற முறையில், இசி அதன் அரசமைப்புச் சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றுவதில் விருப்பமற்றதாக இருக்கிறது.
“ஆகவே, எந்த ஒரு தேர்தலும் நடைபெறுவதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்தமும் நல்லாட்சி முறையும் நடைமுறையாக்கப்படுவதையும், அமலாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டிய அதன் அரசமைப்புச் சட்டப்படியான பணியையும் பொறுப்பையும் இசி கைவிட்டு விட்டது”, என்று பெர்சே அதன் அறிக்கையில் இன்று கூறியது.
தேர்தல் சீர்திருத்தத்திற்கான பெர்சேயின் முக்கியமான பரிந்துரைகள், பிஎஸ்சி அதன் இடைக்கால அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரைகள் மற்றும் இசி அமலாக்கம் செய்ய இணக்கம் காட்டும் பகுதிகள் குறித்த பட்டியலை பெர்சே 2.0 இன் தலைவர் அம்பிகா சீனிவாசன் தயாரித்துள்ளார்.
பிஎஸ்சி ஏற்றுக்கொண்ட பெர்சேயின் நான்கு பரிந்துரைகள்:
1. முழுமையான, சுயேட்சையான தேர்தல் பெயர்ப்பட்டியல் பரிசோதணை.
2. வெளிநாடுகளில் வாழும் தகுதி பெற்ற வாக்காளர்களை வராத வாக்காளர்களாக வாக்களிக்க அனுமதித்தல்.
3. பாதுகாப்பு படையினர் முன்னதாக வாக்களிக்க அனுமதித்தல்.
4. அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துதல்.
பிஎஸ்சியால் சிறிதளவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட இதர நான்கு பரிந்துரைகள்:
1. துணை வாக்காளர் பட்டியலை மக்களின் பார்வைக்காக 30 நாள்களுக்கு வைத்திருத்தல். தற்போதைய 7 நாளிலிருந்து 14 நாள்களுக்கு நீட்டிக்க பிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது.
2. முதல் மற்றும் துணை தேர்தல் பெயர்ப்பட்டியல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வெளிப்படையாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். தொகுதி அடிப்படையின்றி எந்த ஒரு வாக்காளரும் ரிம10 கட்டணம் விதிக்கப்படாமல், ஆட்சேபத்தின் எண்ணிக்கைக்கு வரம்பு வைக்காமல், ஆட்சேபம் தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆட்சேபத்திற்கான கட்டணம் மற்றும் ஆட்சேபத்தின் எண்ணிக்கை ஆகியவற்றை நீக்குவதற்கு பிஎஸ்சி பரிந்துரைத்த வேளையில், பெர்சே பரிந்துரைகளின் இதர பாகங்களை உதாசீனப்படுத்தி விட்டது.
3. குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வாக்குகளுக்காக குடியுரிமை வழங்குவது குறித்து விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைத்தல்.
சாபாவில் கூறப்பட்ட அவ்வாறான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு மட்டும் அரச ஆணையம் அமைக்க பிஎஸ்சி பரிந்துரைத்தது.
4. தகுதி பெற்ற ஆனால் அவர்களுடையத் தொகுதிகளிலிருந்து வெளியில் இருக்க நேரிடும் மற்றும் அவர்களுடையத் தொகுதிகளிலிருந்து மிக அருகிலுள்ள வாக்குச் சாவடி மையத்திலிருந்து 250 கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கும் வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்களிப்பு அளிக்கப்பட வேண்டும்.
இம்மாதிரியான வாக்களிப்பு மேற்கு மலேசியாவில் வாழும் கிழக்கு மலேசியர்களுக்கும், கிழக்கு மலேசியாவில் வாழும் மேற்கு மலேசியர்களுக்கும் வழங்க பிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது.
இசி ஏற்றுக்கொண்டுள்ள 3 சீர்திருத்தங்கள்:
1. 13 ஆவது பொதுத் தேர்தலில் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தல்.
2. பாதுகாப்பு படையினர் முன்னதாக வாக்களித்தல் அமலாக்கம்.
3.தேர்தல் பெயர்ப்பட்டயலைப் பரிசோதணை செய்ய அரசாங்க ஆய்வு மற்றும் மேம்பாடு அமைப்பை, மிமோஸ் பெர்ஹாட், நியமித்தல்.
நியமிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பதற்கான நேரம் மற்றும் வாக்குச் சீட்டுகளிலுள்ள வரிசை எண்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும் என்ற பிஎஸ்சியின் பரிந்துரைகள் குறித்து பெர்சே கவலை கொண்டுள்ளது.
மக்களிடமிருந்து அதிகமான ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தும், பிஎஸ்சி சில பரிந்துந்துரைகளை மட்டுமே செய்துள்ளது குறித்து ஏமாற்றம் தெரிவித்த பெர்சே, மலேசியர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை எச்சரித்தது.
“இசியும் நஜிப்பின் நிருவாகமும் தெளிவான ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: மலேசியர்கள் முழுவதுமான மற்றும் நேர்மையான தேர்தல் சீர்திருத்தத்திற்கு குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
“ஜூலை 9, 2011 இல், 50,000 துணிச்சல் மிக்க மலேசியர்கள் போலீசாரின் வன்முறைகளையும் கைதுகளையும் பொருட்படுத்தாது கோலாலம்பூர் தெருக்களில் ஊர்வலமாகச் சென்று தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
“எந்த ஒரு போலியான முயற்சியும் – அமைதியாகக் கூடுதல் மசோதா போன்றது – பாராட்டு பெறாது, மாறாக தீவிர எதிர்ப்பைப் பெறும்”, என்று பெர்சே மேலும் கூறியது.