நஸ்ரி: பெர்சே 3.0 தெருப் பேரணி நடத்தினால், விளைவை அனுபவிக்க நேரும்

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம்  செய்தால் அதன் விளைவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசீஸ் எச்சரித்துள்ளார்.

“தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார். 

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி), தன் 8 பரிந்துரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாததால் அதிருப்தி அடைந்துள்ள அந்த என்ஜிஓ, 2008-இலும் கடந்த ஜூலை மாதமும் நடத்தியதைப்போன்ற பேரணிகளை  மீண்டும் நடத்தலாம் என்று வெளிவந்திருக்கும் செய்திகளின் தொடர்பில் நஸ்ரி இவ்வாறு கருத்துரைத்தார்.

அந்த என்ஜிஓ-வின் உத்திகளைக் கண்டித்த அமைச்சர், சீரமைப்பு காண விரும்பினால் முறையான வழிகளில் அணுக வேண்டும் என்றார்.

“தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை.

“நம்மிடம் மக்களைப் பிரதிநிதிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.நிலைமைச் சீர்படுத்த விரும்பினால் அந்த அமைப்புமுறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.” 

தேர்தல் சீரமைப்புக்காக அறைகூவல் விடுக்க பெர்சேக்கும் அதன் தலைவர் எஸ்.அம்பிகாவுக்கும் என்ன உரிமை இருக்கிறது என்று நஸ்ரி வினவினார்.  

“அவர்கள் யார்? அவர்களுக்கு ஆதரவாக உள்ள என்ஜிஓ-கள் யாவை? அவர்களை எனக்குத் தெரியாது.எத்தனை பேரை அவர்கள் பிரதிநிதிக்கிறார்கள்? 50 பேரை,100பேரை 200பேரை….?

“50,000பேர் (பெர்சே 2.0பேரணிக்கு) வந்ததாக சொன்னார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் போன்ற பிரதிநிதிகளுடன் ஒப்பிடும்போது அது என்ன பெரிதா?

“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முறையில் நாங்கள் மக்களைப் பிரதிநிதிக்கிறோம்”, என்றவர் வாதாடினார்.

“அம்பிகா ஒன்றுமில்லாதவர். அவருக்கு இதில் தலையிடும் உரிமை இல்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல.

“அவரை நான் தாக்கிப் பேசக்கூட முடியாது. அமைச்சரான என் தகுதிக்கு அது தரமன்று” , என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.

பெர்சேயின் பரிந்துரைகள் அத்தனையையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் பிஎஸ்சிக்கு இல்லை. அதேபோல் பிஎஸ்சி-இன் பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்தும் கடப்பாடு தேர்தல் ஆணையத்துக்கு(இசி) இல்லை என்றாரவர்.

“இசி, தனித்து இயங்குவது. அது அரசாங்கத்துகோ நாடாளுமன்றத்துக்கோ அல்லது வேறு யாருக்குமோ கட்டுப்பட்டதல்ல”, என்று நஸ்ரி விளக்கினார்.

TAGS: