நஜிப் மசீச, கெரக்கான் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக்கட்சிகளான மசீச-வும் கெரக்கானும் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்களில் கலந்து கொண்டார்.

ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச தலைமையகத்தில் நடத்தப்பட்ட மசீச திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் கலந்து கொண்டார்.

காலை மணி 9.50 வாக்கில் அங்கு சென்றடைந்த அவர்களை மசீச தலைவர் டாக்டர் சுவ சொய் லெக் வரவேற்றார். அப்போது முரசுகள் கொட்டப்பட்டன. சிங்க, கடல் நாக நடனங்களும் இடம் பெற்றன.

துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அவரது துணைவியார் நோராய்னி அப்துல் ரஹ்மான், முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமட்டும் அப்துல்லா அகமட் படாவியும் அங்கு இருந்தார்கள்.

அந்த மசீச திறந்த இல்ல உபசரிப்பில் கெரக்கான் தலைவர் டாக்டர் கோ சு கூன், மஇகா தலைவர் ஜி பழனிவேல், பிபிபி தலைவர் எம் கேவியஸ் உட்பட அமைச்சர்களும் பிஎன் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 
பின்னர் நஜிப்பும் அவரது துணைவியாரும் செராஸில் மெனாரா பிஜிஆர்எம்-மில் கெராக்கான் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டார்கள்.

பினாங்கு ஜார்ஜ் டவுன், தஞ்சோங் சிட்டி மரினாவில் அந்த மாநில பிஎன் ஏற்பாடு செய்துள்ள சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பிலும் பேராக் சித்தியாவானில் நடத்தப்படும் ஒரே மலேசியா திறந்த இல்ல உபசரிப்பிலும் பிரதமர் கலந்து கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெர்னாமா