சிட்னியில் அளவுமீறி பொருள்வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவீயார் ரோஸ்மா மன்சூர், அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் விடுமுறை கழிக்கச் சென்றிருந்தபோது பொருள்களை மிதமிஞ்சி வாங்கிக் குவித்தார் என்று கூறப்படுவதை நிராகரித்தார்.

“அது அபத்தம், மிகைப்படக் கூறப்பட்டிருக்கிறது.அதில் உண்மை இல்லை”, என்றாரவர். இன்று, கோலாலம்பூரில் மசீச-வின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொள்ள வந்த ரோஸ்மாவை மலேசியாகினியும் த சன் நாளேடும் சந்தித்தன.

ஆஸ்திரேலிய நாளேடான சிட்னி மார்னிங் ஹரால்டில்  ‘ பிரைவேட் சிட்னி’ என்ற பகுதியில் ரோஸ்மா பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. அது, உண்மைதானா என்று அவரிடம் கேட்டதற்கு, “நான்தான் எப்போதும் பலிகடா ஆகிறேன்”, என்றவர் கூறினார்.

தம்மைப்  பற்றி எழுதுவதே அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்றாரவர்.

அப்பகுதியில், “பொருள்வாங்வதில் முதல் பெண்மணி” என்று தலைப்பிட்டு  எழுதிய பத்தி எழுத்தாளர் எண்ட்ரு ஹார்னரி, நவநாகரீக ஆடைகளை விற்பனை  செய்யும் ஒரு கடையில் ரோஸ்மா பொருள்வாங்க ஆஸ்$100,000(ரிம325,000)செலவிட்டதாகக் கூறி இருந்தார்.

ஆடை வடிவமைப்பாளரான கார்ல் காப், ரோஸ்மாவே தன் “மிகப் பெரிய வாடிக்கையாளர்” என்று கூறியதாகவும் ஹார்னரி குறிப்பிட்டிருந்தார்.

மூன்று வாரங்களுக்குமுன் ரோஸ்மா “தனிப்பட்டமுறையில் விடுமுறை” கழிக்கச் சென்றிருந்தபோது இது நடந்ததாம்.

நஜிப்பும் ரோஸ்மாவும் ஐந்து நட்சத்திர டார்லிங் ஹாட்டலின் பெண்ட்ஹவுசில் தங்கியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.பெண்ட்ஹவுசின் ஒரு-நாள் வாடகை ஆஸ்$20,000(ரிம65,100).

அந்நாளேட்டில் கூறப்பட்டிருப்பதில் உண்மை உண்டா என்று மீண்டும் ரோஸ்மாவை வினவியபோது, “இதற்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. அவர்கள் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள்”, என்றார்.

இதற்குமுன் ரோஸ்மா பொருள்வாங்க பெரும்பணம் செலவிடும் பழக்கமுள்ளவர் என்பதை மாற்றரசுக் கட்சியும் கவனப்படுத்தியிருந்தது.ரிம24மில்லியனுக்கு அவர் வைர மோதிரம் ஒன்று வாங்கியதாகவும்  தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கைப்பைகளை அவர் நிறைய வாங்கி வைத்திருப்பதாகவும் அது கூறியது.ஆனால், ரோஸ்மா அதை  வன்மையாக மறுத்தார்.