லிம் கிட் சியாங்: மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்கள்

கடல் நாக ஆண்டை மலேசியர்கள் வரவேற்கும் வேளையில் மலேசியர்கள் விவாதிப்பதற்கு ஐந்து சூடான விஷயங்களை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முன் வைத்துள்ளார்.

1) கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் முறையீடு செய்து கொண்டது.  “அன்வார் ஜெயிலில் அடைக்கப்படுவதைக் காண அம்னோ தலைவர்கள் உறுதி பூண்டுள்ளதை அது காட்டுகிறது” என அவர் கருதுகிறார்.

2) பேராக்கில் பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்ட சட்ட விரோத, அரசமைப்புக்கு முரணான, ஜனநாயகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தொடர்பில் சுமத்தப்பட்ட தேச நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுவித்ததை முறையீட்டு நீதி மன்றம் மாற்றியது.

அந்த இரு சம்பவங்களும் நமது நீதித் துறை மீது தேசிய அனைத்துலக நம்பிக்கை மீண்டும் ஏற்படுவதற்கான பாதையில் மலேசியா உறுதியாக சென்று கொண்டிருக்கிறது என பொது மக்கள் கொண்டிருந்த எண்ணத்தை சிதறடித்து விட்டன.

3) 300 மில்லியன் ரிங்கிட் பெறும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல், இந்த நாட்டில் ஊழல்களும் நண்பர்களுக்கு உதவும் போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றது என அவர் சொன்னார்.

இந்த ஊழலுக்கு முன்பே டிஐ என்ற அனைத்துலக வெளிப்படை அமைப்பு வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டில்- கடந்த 17 ஆண்டுகளாக- 60வது இடத்தில் 4.3 புள்ளிகளுடன் மலேசியா இருந்து வருகிறது. 2012ல் அந்த நிலை மேலும் சரியும் என லிம் மதிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சுதந்தரம், நேர்மை, தொழில் நிபுணத்துவம் மீது பொது மக்கள் நம்பிக்கை வைக்கவே இல்லை.

“பக்காத்தான் தலைவர்களை ஒடுக்குவதற்கும் வேட்டையாடுவதற்கும் பிஎன் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது-   அதன் விளைவு தியோ பெங் ஹாக் கொலையுண்டதில் முடிந்தது- என்ற அதனுடைய தொடக்க கால தோற்றத்தை அது இன்னும் கை விட முடியவில்லை.  அந்தக் குற்றம் இன்னும் நீதி கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.”

4) உலக மிதவாதிகள் இயக்கம் குறித்து நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில் அரங்கேறிய மோசடியும் இரட்டை வேடமும் அவரது நான்காவது விஷயமாகும். நஜிப் பிரதமராகப் பொறுப்பேற்ற 33 மாதங்களில் இனவாதமும் வெறுப்புணர்வும் பொய்மையான உணர்வுகளும் மேலோங்கி புதிய எல்லைகளைத் தொட்ட வேளையில்- அதற்கு முதல் காரணம் அம்னோ பத்திரிக்கையான உத்துசான் மலேசியாவாகும்-  அந்த மாநாடு நிகழ்ந்துள்ளது. 

“அந்த மாநாடு குறித்த மிக முக்கியமான விஷயம்- மலேசியாவில் மிதவாதிகளுடைய குரலாகப் பிரதமர் கருதப்படுவதற்கு நான் கூறிய ஐந்து சோதனைகளுக்கு பதில் அளிக்க நஜிப் தவறியதாகும்.”

5) ஐந்தாவது. பொதுத் தேர்தல். “இன, சமய, வட்டார வேறுபாடின்றி மலேசியர்கள் புத்ராஜெயாவிலிருந்து அம்னோ/பிஎன் -னை வெளியேற்றி மலேசியாவின் ஏழாவது பிரதமராக அன்வார் இப்ராஹிமைக் கொண்ட புதிய பக்காத்தான் கூட்டரசு அரசாங்கத்தை அமர்த்தினால் மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்படும். நாட்டைக் காப்பாற்றுவதற்கு உள்ள ஒரே நம்பிக்கையும் அதுதான்.” என லிம் முடித்துக் கொண்டுள்ளார்.