“கடல் நாக ஆண்டு திருப்பு முனையாகும்”

மலேசிய சீனர்கள் கடல் நாக ஆண்டைக் கொண்டாடும் வேளையில் அவர்களுடைய எதிர்காலம் ஒர் திருப்பு முனையில் இருப்பதாக பாண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார்.

“சீன வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு கடல் நாக ஆண்டு சிறந்த நேரம் எனக் கருதுகின்றனர்,” என முன்னாள் மசீச தலைவருமான அவர் சொன்னார்.

“அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக கடல் நாக ஆண்டில் பிறக்கும் குழந்தைகள் மேன்மையானவர்களாக இருப்பர் என நம்புகின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் சீனர்கள் எண்ணுகின்றனர்,” என அவர் விடுத்துள்ள அறிக்கை கூறியது.

“அந்த சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும் நாடு சமூக, அரசிய, பொருளாதார ரீதியில் நிலை குலைந்தால் யாருக்கும் எதிர்காலம் இல்லை.”

“குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நாட்டின் கடன்கள் 455 பில்லியன் ரிங்கிட்டாக கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அந்த அளவு 2010ம் ஆண்டு கடனுடன் ஒப்பிடுகையில் 11.9 விழுக்காடு கூடுதலாகும். இவ்வாண்டு மலேசியர்கள் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம் இதுவாகும்.”

“அத்துடன் அண்மையில் உலக நிதி நேர்மை என்ற அமைப்பு வெளியிட்ட தகவலும் முக்கியமானது-உலகில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளில் நான்காம் இடத்தில் மலேசியா வைக்கப்பட்டுள்ளதாகும். இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் மட்டும் சட்ட விரோதமாக நாட்டிலிருந்து 1.08 டிரில்லியன் ரிங்கிட் வெளியேறியுள்ளது.”

“அந்த மூலதன வெளியேற்றம், நாட்டின் ஆரோக்கியத்தை ஊழலும் தீய வழிகளில் சேர்க்கப்ப்படும் பணமும் எந்த அளவுக்கு நாட்டை உருக்குலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.”

அனைத்துலகக் கையிருப்புக்களின் அடிப்படையில் நாட்டின் நடப்பு மோசமான நிதி நிலைக்கு இந்த நாட்டை ஆளுகின்ற அரசியவாதிகளே பொறுப்பேற்க வேண்டும் என ஒங் கருதுகிறார்.

“என்றாலும் உயரிய அரசாங்கப் பதவிகளுக்கு நாம் தவறான தலைவர்கள் மீது நாம் நம்பிக்கை வைத்த நாமும் அதற்கு இணையாக பொறுப்பேற்க வேண்டும். நான் அது குறித்து விவரமாகச் சொல்ல வேண்டியதில்லை. காரணம் அம்பலப்படுத்தப்பட்டு வரும் ஊழல்கள் எண்ணிக்கை பொது மக்களுக்கு தெரிந்த விஷயமாகும். நமது நாட்டின் போட்டி ஆற்றலும் நேர்மையும் சீர்குலைவதற்கு அவை தக்க சான்றுகள்.”