நாட்டின் பட்ஜெட்டில் வரையறுக்கப்பட்ட மலிவு வீடமைப்புத் திட்டத்தில் ரிம5 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் எத்தனை விழுக்காடு இந்திய தோட்டப் பாட்டாளிகள் பயனடைந்துள்ளனர் என்று எழுத்துவடிவ கேள்வியை செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்தார்.
அக்கேள்விக்கு மனிதவள அமைச்சர் எஸ். சுப்ரமணியம் அளித்த பதில் இப்படி இருக்கிறது:
2011 ஆண்டிற்கான நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் தாக்கல் செய்த போது, மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தோட்டப் பாட்டாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது எனக் கூறினார்.
ஆள்பல துறையின் வழி இத்திட்டத்தை மனிதவள அமைச்சு மேற்கொண்டு வருகிறது. பேங்க் சிம்பானான் நேசனல் இதற்கு உறுதுணையாய் இருந்து கடன் வசதிகளைச் செய்து தருகிறது.
இன பாகுபாடின்றி மலேசிய குடிமக்களாக உள்ள எல்லா தோட்டப் பாட்டாளிகளுக்குமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரிம60 ஆயிரம் விலையிலான மலிவு விலை வீடு 4 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடன் வசதி செய்து தரப்படுகிறது.
இத்திட்டத்தின் வழி தோட்டப் பாட்டாளிகளின் வாழ்க்கை மேம்படுவதோடு, அவர்கள் தோட்டத்தை விட்டுச் செல்லாமல் தொடர்ந்து அங்கேயே வசிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்.
மலிவு விலை வீடமைப்புத் திட்டம் முதலில் ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி, சிகாமட், குளுவாங் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மலாய்க்காரர்களிடமிருந்து 142 விண்ணப்பங்களும், இந்தியர்களிடமிருந்து 4 விண்ணப்பங்களும் பெற்றப்பட்டன. சீனர் எவரும் விண்ணப்பிக்கவில்லை.
இது தொடர்பாக மனிதவள அமைச்சு சென்ற ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கூட்டம் ஒன்று நடத்தியது. இக்கூட்டத்திற்கு மனிதவள அமைச்சர் தலைமை தாங்கினார்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்தவர்களில் வீடுகள் பெற தகுதியுடையவர்களாக 33 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில் 22 பேர் ஜொகூர், கோத்தா திங்கி, தாமான் மேடான் ஜெயாவிலும், 11 பேர் சிகாமட், தாமான் பெர்மையிலும் வீடுகளைப் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.
வீடுகள் பெற்றவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள். இந்தியர் எவரும் இல்லை. இதற்குக் காரணம் “இந்திய விண்ணப்பதாரர்கள் குறைவு.”
இதுதான் அமைச்சர் எஸ்.சுப்ரமணியத்தின் பதில். இந்தப் பதில் ஏற்புடையதானா என்று செனட்டர் இராமகிருஷ்ணன் வினவுகிறார்.
ஆதிகாலத்திலிருந்து தோட்டங்களில் உழைத்து வருபவர்கள் இந்தியர்கள். ஆனால், அவர்களில் ஒருவருக்குக்கூட மலிவு விலை வீடு கிடைக்கவில்லையா அல்லது கொடுக்கப்படவில்லையா?
இந்த விவகாரத்தில் மஇகா கண்களை மூடிக்கொண்டிருகிறதா? இந்த அவல நிலையை யாரிடம் போய் முறையிடுவது?
மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்தான் ஜொகூரில் இந்த விவகாரத்தைக் கையாண்டுள்ளார். அப்பாவி இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அவரால் உதவி செய்ய இயலவில்லையா?
தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் அவசியம் என முன்னதாக அமைச்சர் கூறியதற்கும் பின்னால் உள்ள உண்மை நிலைக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறதே!
அதே வேளை, இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடு பற்றி தெரியாதா? தெரிவிக்கப்படவில்லையா? அல்லது அறியாமை தொடர்கிறதா? இக்கேள்விக்களைத் தொடர்ந்து “எங்கோ தவறு நிகழ்கிறது!”, என்றார் செனட்டர் இராமகிருஷ்ணன்.