தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்வி மேம்பாடு குறித்துப் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுத்துள்ள அறிவிப்பு காலத்துடன் செய்யப்பட்டிருந்தால் வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எதிர்வரும் தேர்தலுக்கு முன், இந்தியர்களை ஏமாளிகள் எனக் கணக்கிட்டு தமிழ்ப்பள்ளிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கவர நினைப்பது ஏமாற்றமளிப்பதாகவுள்ளது என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார்.
அறிவிக்கப்பட்ட 6 பள்ளிகளில் மூன்று பள்ளிகளை சிலாங்கூரில் கட்ட உத்தேசித்துள்ளதை வரவேற்கிறோம் என்று கூறிய அவர், இம்மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை காலங்கடந்தாவது மத்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளதே என்ற ஆறுதலை மட்டுமே இந்த அறிவிப்பு அளிக்கிறது என்றார்.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் பி.ஜேஎஸ் 1இல், மஇகாவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி.எல் காந்தன் 1978ஆம் ஆண்டிலிருந்து கிள்ளான் தாமான் செந்தோசாவில் 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு நிலம் வழங்கியது வரையில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தொடுத்த வற்புறுத்தலுக்குக் கிடைத்த வெற்றியாகும் இந்த அறிவிப்பு என்றார் சேவியர்.
பிரதமர் நஜிப் துன் ரசாக் சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பே, 1995இல் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். இப்போதுதான் தமிழ்ப்பள்ளிகள் குறித்த ஆய்வறிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்.
பிரதமர் அவரின் கோரிக்கையை முன்னாள் மஇகா தேசிய தலைவர் ச. சாமிவேலுவின் முன்னிலையில் அரசு சார இயக்கங்களிடம் வைத்திருப்பது, விசமத்தனமான செயலா? அல்லது அவரது பாணியில் “நம்பிக்கை”’ என்பதற்கு எதிர்பதமான ஏமாற்று வேலையா என்று தெரியவில்லை!
பிரதமரின் கோரிக்கையின் வழி மஇகா இவ்வளவு நாள்களாக தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனையை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவில்லை என்பதை உணர்த்துகிறாரா? அல்லது அக்கட்சியைப் பொதுவில் விமர்சனம் செய்கிறாரா என்றும் புரியவில்லை என்றார் சேவியர்.
இன்றைய பிரதமர் 1995ஆம் ஆண்டில் கல்வியமைச்சரானது முதல் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ வேண்டிய பல முக்கிய பொறுப்புகளை வகித்தும், தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் சற்றும் அக்கறையின்றிச் செயல்பட்டிருப்பதையே அவரின் அறிக்கை உணர்த்துகிறது.
தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலைக்கு நிதியே மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால் 2004ஆம் ஆண்டு முதல் துணைப் பிரதமராகவும், 2008ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சராகவும் அத்துடன் பிரதமராகவும் இருந்து வரும் வேளையில் தமிழ்ப்பள்ளிகளின் நிலைகுறித்து ஆய்வு அறிக்கையை ஏற்பாடு செய்ய இப்பொழுது கேட்டிருப்பது “சுத்தப் பகல் வேடமாகும்” என்று சேவியர் மேலும் கூறினார்.
இவ்வேளையில் பிரதமரின் அறிவிப்பு நம்பகமானதா? இதற்கு முன் இந்திய சமூகத்தின் முன் வைக்கப்பட்ட எத்தனையோ அறிவிப்புகள் அறிவிப்பாகத்தானே இருக்கின்றன.
முக்கியமாக, உலுசிலாங்கூர் இடைத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட செரண்டா தமிழ்ப்பள்ளிக்கான வாக்குறுதி என்ன ஆனது? பத்தாங்காலி தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவது என்ன ஆயிற்று? கொள்கலன்களில் வகுப்பு நடத்தப்படுவதை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. கமலநாதன் இன்னும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரவில்லையா?, என்று அவர் மேலும் வினவினார்.
இண்டலோக் நாவல் மீட்பு தொடர்பாக இன்று வரை கல்வி அமைச்சரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதுமில்லையே, ஏன்?
உண்மையில், அன்று பாரிசானுக்கும், பிரதமருக்கும் அரசியல் ரீதியில் இந்தியர்களும், தமிழ்ப்பள்ளிகளும் அவசியமில்லை. ஆனால், இன்று நாடளுமன்றத்தைக் கலைக்கச் சரியான நேரத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் இந்தியர்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, சிலாங்கூரை அம்னோ மீண்டும் கைப்பற்ற இந்தியர்களின் தயவு தேவைப் படுகிறது.
தமிழ்ப்பள்ளிகள் மீதான பிரதமரின் அறிவிப்பானது, இந்திய சமூகம் தமிழ்ப்பள்ளிகளின் சாதாரண தேவைகளை நிறைவு செய்யக்கூட ஒரு பொதுத்தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
பிரதமரின் இப்போக்கு அம்னோ போன்ற ஓர் இனவாத அரசியல் தீவிரவாத இயக்கத்தின் கொட்டத்தை அடக்கவல்ல மாற்று அணியான பக்காத்தானின் அவசியத்தையும் மக்களுக்கு நன்கு உணர்த்துகிறது. இந்நாட்டு இந்தியர்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவார்கள், பார்ப்போம்!, என்று கூறுகிறார் சேவியர் ஜெயக்குமார்.