என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது பற்றிய “முழு விசாரணையை” தாமதப்படுத்தியதற்காக பொதுக் கணக்குக் குழுத் தலைவர் அஸ்மி காலித் தமது பதவியைத் துறக்க வேண்டும் என டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது பொதுக் கணக்குக் குழு, தனது கண்டு பிடிப்புக்களைத் தெரிவிப்பதற்கு உதவியாக அது, தனது விசாரணையை நடத்துவதற்கு அஸ்மி “தடையாக இருக்கக் கூடாது” என அந்த ஈப்போ பாராட் எம்பி கூறினார்.
விசாரணையை உடனடியாகத் தொடங்க பொதுக் கணக்குக் குழு தவறுமானால் “அது தனது பொறுப்பை நழுவ விட்டு விட்டதாக” கருதப்படும் என்றும் அவர் சொன்னார்.
என்எப்சி மீதான புலனாய்வை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் போலீசும் முடிக்கும் வரையில் என்எப்சி நிர்வாகம் மீதான விசாரணையை பாடாங் புசார் எம்பி-யுமான அஸ்மி நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து லிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
“அஸ்மியின் முடிவு அவரது சொந்த முடிவாக இருக்க வேண்டுமே தவிர பொதுக் கணக்குக் குழுவின் கூட்டு முடிவாக இருக்க முடியாது”, என்றார் அவர்.
கால் நடை வளர்ப்பை நோக்கமாகக் கொண்ட அந்தத் திட்டத்தில் பல பிரச்னைகள் இருப்பதை பிகே ஆர் அம்பலப்படுத்தி வருகிறது. பொது நிதியைப் பயன்படுத்தி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டை வாங்கியது, அந்தத் திட்டத்தை நிர்வாகம் செய்யும் குடும்ப உறுப்பினர்களுடைய வெளிநாட்டுப் பயனங்களுக்கு பணம் கொடுத்தது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள என்எப்சி, உற்பத்தி இலக்குகளை எட்டியுள்ளதாகவும் பயன்படுத்தப்படாத நிதியை முதலீடு செய்யும் பொருட்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் வாங்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனுடன் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் மகளிர் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தத் திட்டம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே கடன் அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாக அஸ்மி புகார் செய்திருந்தார்.