ABU செராமாவுக்கு இடையூறு தொடர்பில் ஒருவர் கைது

ABU எனப்படும் ‘அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ அமைப்பு கடந்த சனிக்கிழமை ஷா அலாமில் ஏற்பாடு செய்திருந்த செராமா நிகழ்வுக்கு இடையூறு ஏற்பட்டதின் தொடர்பில் போலீஸ் ஒருவரைக் கைது செய்துள்ளது.

அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஸாஹேடி அயோப் இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபர், சம்பவத்துடன் தொடர்புடையவர் அல்ல என்றும் அவர் விளக்கினார்.

கலவரம் ஒன்றில் கம்புகள் உட்பட ஆயுதங்களை வைத்திருப்பது சம்பந்தப்பட்டது, 148வது பிரிவாகும்.

“இன்று மாலை மணி 4.00 வாக்கில் நாங்கள் ஷா அலாம் போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களைச் சந்திப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுக்கு மேற்பட்டவர் என மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் போலீஸ் இன்னும் பலரைக் கைது செய்யக் கூடும் என்றும் அது கூறியது.

“பல தனி நபர்கள் அந்த செராமாவுக்கு இடைஞ்சல் செய்தனர் என நாங்கள் நம்புகிறோம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அந்த தனி நபர்களை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்றும் ஸாஹேடி கூறினார்.

“எதுவும் நடக்கவில்லை”

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவுடன் கூட்டாக ஜாலான் கெபுனில் உள்ள ஷா அலாம் மாநகராட்சி மன்ற மண்டபத்தில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு, கம்புகளை வைத்திருந்த கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டது.

அங்கு நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் காயமடைந்தார். அவர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“எதுவும் நடக்கவில்லை” என இதற்கு முன்னர் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா கூறியிருந்தார். என்றாலும் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் அந்த நிகழ்வு குறித்து மகிழ்ச்சி கொள்ளவில்லை என்றார் அவர்.

ABU அந்தச் சம்பவம் பற்றி நேற்றுப் போலீசில் புகார் செய்தது.