பெரும்பாலோர் நினைப்பதுபோல் அல்லாது பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம்(யுயுசிஏ), 2009-இல் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் சுதந்திரமாக செயல்பட ஊக்குவிப்பதாக அரசு-ஆதரவு மாணவர் தரப்பான எஸ்பிரசி கூறுகிறது.
“யுயுசிஏ முறையற்ற சிந்தனைகளிலிருந்து மாணவர்களை விடுவிக்கிறது”, என்று அதன் தலைவர் முகம்மட் ஷாஹார் அப்துல்லா கூறினார்.அவர் நேற்று ஷா ஆலமில் கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.
‘யுயுசிஏ இன்னும் பொருத்தமானதுதானா?’ என்ற தலைப்பில் மலாய்மொழி நாளேடான சினார் ஹராபான் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஷாஹார், அச்சட்டம் பல்கலைக்கழகங்கள் “தரமான” பட்டதாரிகளை உருவாக்குவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
“அச்சட்டம் கல்வியில் சாதனை புரிவதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ள பெரும்பாலான மாணவர்களின் நலனைப் பாதுகாக்கிறது”, என்றாரவர்.
பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் அரசியல் மட்டும் பேசப்பட வேண்டும்.இது மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்று நினைக்கிறார் ஷாஹார்.
‘தேசிய அரசியல் மாணவர்களைக் குழப்பும்’
“தேசிய அரசியலில் மாணவர்களின் கவனம் செல்லக்கூடாது. தேசிய அரசியலைக் கலந்தால், மாணவர்கள் குழப்பமடைவர்”, என்றாரவர்.
அதே வேளையில், புத்ரா உலக வாணிக மையத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஒரு கொடியை இறக்கிய மாணவரின் செயலையும் அவர் தற்காத்துப் பேசினார்.
“நாம் துணிச்சலாகக் கருத்துரைக்கவோ எதிர்க்கவோ அஞ்சக்கூடாது….அஞ்சினால் மலேசியா விழுந்துவிடும்.மலாக்கா நீரிணையைக் கைப்பற்ற எதிரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்”, என்று ஷாஹார் கூறினார்.
ஷாஹார் பிரதமர் நஜிப்புக்கு எஸ்பிரசியின் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.ஆனால், யுயுசிஏ-இல் திருத்தம் செய்யும் பிரதமரின் முடிவுடன் அவருக்கு உடன்பாடு இல்லை. யுயுசிஏ இப்போதைய நிலையில் “ மிகச் சரியாகவே உள்ளது” என்றவர் நினைக்கிறார்.
மலேசிய இளைஞர் மன்ற(எம்ஒய்சி) தலைவர் முகம்ம்ட் மாலிகி முகம்மட் ரபியி-யும் யுயுசிஏ இக்காலத்துக்கும் பொருத்தமான சட்டமே என்பதில் உடன்படுகிறார்.
ஆனால், வெளிநாட்டில் உள்ள மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் இல்லாத இளைஞர்களும் அரசியலில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கும்போது உள்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் தடைப்போடுவதுதான் அவருக்குப் பிடிக்கவில்லை.
மாணவர்களை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் அவர்களுக்கிடையில் “சச்சரவுகள் ஏற்படுவதை”த் தவிர்க்கவும் யுயுசிஏ தேவைதான் என்றாரவர்.
இதனிடையே, புத்ரா உலக வாணிக மையத்தில் கொடியை இறக்கி அதன் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட யுனிவர்சிடி பெண்டிடேக்கான் சுல்தான் இட்ரிஸ் மாணவர் ஆடம் அட்லி, மாணவர் சுதந்திரத்துக்கும் கல்விக்கழகங்களின் சுதந்திரத்துக்கும் யுயுசிஏ-யோ அரசியல் கட்சிகளோ, அரசாங்கக் கட்டுப்பாடோ தீர்வு காண முடியாது என்றார்.
“ கல்விக்கழகங்களில் உண்மையான சுதந்திரத்தை மாணவர்களால்தான் கொண்டுவர முடியும். எந்த அரசியல் கட்சியும் மாணவர் உரிமைகளுக்காகப் போராடுவதில்லை. ஏனென்றால் மாணவர் சுதந்திரத்தை எண்ணி அரசும் மாற்றரசுக் கட்சியும் அஞ்சுகின்றன”, என்று ஆடம் கூறினார்.
“ஒரு பல்கலைக்கழகம் யாருடைய செல்வாக்குக்கும் உட்பட்டிருக்கக் கூடாது”, என்று குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே யுயுசிஏ-யை எடுத்துவிட்டு அதன் இடத்தில் மாணவர் உரிமைகளை வலியுறுத்தும் மெக்ன கார்டா ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
மாணவர்கள், மாற்றரசுக் கட்சி மேடைகளைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைத்ததையும் ஆடம் தற்காத்துப் பேசினார்.
“எங்களுக்கு எந்த மேடையும் கிடைப்பதில்லை.அதனால்தான் மாற்றரசுக் கட்சி மேடைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம். நாங்களே கூட்டங்கள் ஏற்பாடு செய்யலாம்.ஆனால், மாதம் ஒரு கூட்டம் நடத்தத்தான் அனுமதி வழங்கப்படுகிறது…அதை நடத்தவும் பணம் இருப்பதில்லை”, என்றவர் கூறினார்.