சையட் ஹுசேன் உத்துசான், சுல்கிப்லி மீது 10 மில்லியன் ரிங்கிட் வழக்கு

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரான செனட்டர் சையட் ஹுசேன் அலி, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின் மீதும் உத்துசான் மிலாயு பெர்ஹாட் மீதும் 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு, தமது நாடாளுமன்றத் தொகுதியைக் காலி செய்தால் சையட் ஹுசேன் தமக்கு வழங்க முன் வந்ததாக சுல்கிப்லி தமது வலைப்பதிவில் எழுதியிருந்தது சம்பந்தப்பட்டதாகும்.

அந்த வழக்கில் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேட்டின் குழும ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்-கும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மெஸர்ஸ் எட்வின் லிம் சுரேன் அண்ட் சோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

“Zul Noordin nafi dakwaan Syed Husin” (சையட் ஹுசேன் கூறியதை சுல் நூர்டின் மறுக்கிறார்) என்னும் தலைப்பில்  உத்துசான் மலேசியாவில் வெளியிடப்பட்ட கட்டுரை, சுல்கிப்லியின் வலைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சையட் ஹுசேன், சுல்கிப்லியைச் சந்தித்து கூலிம் பண்டார் பாரு எம்பி தமது இடத்தை காலி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் உத்துசான் மலேசியாவிலும் வெளியான அந்த வலைப்பதிவு கூறியது.

“அவ்வாறு சுல்கிப்லி செய்தால் அவருக்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அவருக்கு சிலாங்கூர் மாநில அரசாங்க துணை நிறுவனம் ஒன்றில் பதவி ஒன்றை வழங்க முன் வருவார் என்றும் மாதம் ஒன்றுக்கு 50,000 ரிங்கிட் முதல் 60,000 ரிங்கிட் வரையிலான மதிப்புள்ள சலுகைகளும் வழங்கப்படும்”

அஸ்மின் அலிக்கு வழி விடுவதற்காக பிகேஆர் துணைத் தலைவர் பதவியை சையட் ஹுசேன் காலி செய்தால் அது போன்ற இழப்பீட்டையும் அன்வார் வழங்க முன் வந்தார் என்றும் சுல்கிப்லி தமது வலைப்பதிவில் கூறிக் கொண்டார்.

“தோற்றத்துக்கும் நடத்தைக்கும் களங்கம் விளைவிப்பதே நோக்கம்”

சையட் ஹுசேன் ஊழல் பழக்கமுள்ளவர், கிரிமினல் குற்றத்தைப் புரிந்துள்ளார், இரட்டை வேடம் போடுகின்றவர், ஒர் அரசியவாதியாகவும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவராகவும் இருக்கத் தகுதியற்றவர் என்னும் அர்த்தத்தை அந்தக் கட்டுரை கொண்டுள்ளதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

அந்த வலைப்பதிவும் உத்துசான் மலேசியாவும் தமது தோற்றத்துக்கும் நடத்தைக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் சையட் ஹுசேன் கூறிக் கொண்டுள்ளார்.

தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அவர் கோரியிருப்பதுடன் இது போன்ற அவதூறான கட்டுரைகளை வெளியிடக் கூடாது என பிரதிவாதிகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வழக்கு சமர்பிக்கப்பட்ட போது சையட் ஹுசேனும் அங்கு இருந்தார்.

அந்தக் கட்டுரை அப்பட்டமான பொய் என்றும் சுல்கிப்லியிடம் அது போன்று எதுவும் வழங்க முன் வரவில்லை என்றும் மாதம் ஒன்றுக்கு அத்தகைய வெகுமதியை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்க நிறுவனத்திடம் பணம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

“மேலும் உத்துசான் உண்மைகளை என்னுடன் சரி செய்து கொள்ளத் தவறி விட்டது. சுல்கிப்லியின் வலைப்பதிவை அப்படியே உண்மையாக எடுத்துக் கொண்டு விட்டது,” எனக் கூறிய சையட் ஹுசேன், உத்துசானுக்கு எதிராக தாம் தொடுக்கும் இரண்டாவது வழக்கு இதுவெனக் குறிப்பிட்டார்.