சிலாங்கூர் பாஸ்: புதிய துறை தேர்தலுக்கு ஆயத்தமாக எங்களுக்கு உதவும்

சிலாங்கூரில் புதிய ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அகமட் யூனுஸ் ஹைரி, இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பதில்  இளைஞர் விளையாட்டுத் துறைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் மாநில பாஸ் மன நிறைவு கொள்கிறது.

காரணம், இளைஞர்களிடயே குறிப்பாக தேர்தல் காலத்தில் தனது ஆதரவை வளர்த்துக் கொள்வதற்கு கட்சிக்கு பேருதவியாக இருக்கும் என சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் காலித் சாமாட் கூறினார்.

“நாங்கள் இஸ்லாமிய விவகாரத் துறையை வைத்திருக்கவில்லை என்றாலும் அது எங்களைப் பாதிக்கவில்லை. இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இளைஞர் விளையாட்டுத் துறைப் பொறுப்பு பாஸ் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதற்கு எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது,” என அவர் இன்று காலை ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

பாஸ் கட்சியிலிருந்து அதன் முன்னாள் சிலாங்கூர் ஆணையாளர் ஹசான் அலி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் அகமட் யூனுஸ் கடந்த புதன் கிழமை நியமிக்கப்பட்டார்.

என்றாலும் மந்திரி புசார் காலித் சாமாட் இப்ராஹிம்,  ஹசான் வைத்திருந்த இஸ்லாமிய விவகாரத் துறையை  தாம் ஏற்றுக் கொண்டு தம்மிடம் இருந்த இளைஞர் விளையாட்டுத் துறையை அகமட் யூனுஸிடம் வழங்கினார்.

அந்த ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான், தாம் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.

தாம் பொதுத் தேர்தலில் கவனம் செலுத்த விரும்பியதாக அவர் சொன்னார்.

“நான் அவமானப்படுத்தப்பட்டிருந்தால் நான் அகமட் பதவி ஏற்கும் சடங்கில் கலந்து கொண்டிருக்க மாட்டேன். ஆனால் நான் பங்கு கொண்டேன்,” என்றார் அவர்.

இதனிடையே ஹசான் நீக்கப்பட்டதால் பாஸ் நிர்வாக எந்திரம் பாதிக்கப்படவில்லை என்று சிலாங்கூர் பாஸ் செயலாளர் முகமட் கைருதின் ஒஸ்மான் கூறியுள்ளார்.

“மாநிலத்தில் உள்ள 22 தொகுதிகளும் தாங்கள் ஹசான் நீக்கப்பட்டதால் பாதிக்கப்படவில்லை என வாக்குறுதி அளித்துள்ளன. பாஸ் கட்சி நிலைத் தன்மையுடன் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது.”

இஸ்லாமிய விவகாரங்களைக் கையாளுவதில் மந்திரி புசார் நம்பிக்கை இழந்து விட்டதை துறைகள் மாற்றப்பட்டது உணர்த்துவதாக ஹசான் கூறிக் கொண்டிருந்தார்.