வணிகரான தான் ஹாக் ஜு-வுக்கு 500,000 ரிங்கிட் கொடுக்குமாறு பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அந்த 40 மில்லியன் ரிங்கிட் நில விவகாரத்துக்கு பிஎன் தான் பொறுப்பேற்க வேண்டும் என அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கூறுகிறது.
2005ம் ஆண்டு செபராங் பிராயில் செய்து கொள்ளப்பட்ட நில ஒப்பந்தத்துக்கு முன்னைய பிஎன் நிர்வாகமே காரணம். பொது நிதிகள் இழக்கப்படுவதற்கு அது 1 ரிங்கிட்டாக இருந்தாலும் அது பொறுப்பேற்க வேண்டும் என பினாங்கு மலாய் காங்கிரஸ் இன்று கூறியது.
“அது 1 ரிங்கிட்டாக இருந்தாலும் அது மக்கள் பணம். இழப்பீட்டுத் தொகை 40 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 500,000 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டதால் தன்னை நிரபராதி போல பின் காட்டிக் கொள்ள முயலக் கூடாது,” என அதன் தலைவர் ரஹ்மாட் இஷாஹாக் கூறினார்.
“பினாங்கு மக்கள் அரசியல் ஏமாற்று வேலைகளுக்கு அவ்வளவு எளிதாகப் பலியாகி விட மாட்டார்கள்.
மேலும் அந்த வழக்கு மேல் முறையீடு செய்து கொள்ளப்பட்டுள்ளது,” என்றார் ரஹ்மாட். தான் ஹாக் ஜு கோரியிருந்த 40 மில்லியன் ரிங்கிட்டுக்குப் பதில் 500,000 ரிங்கிட்டை அவருக்கு கொடுத்தால் போதும் என முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு பற்றி அவர் குறிப்பிட்டார்.
அந்த விவகாரத்துக்கு முன்னைய பிஎன் நிர்வாகம் காரணம் என பினாங்கு பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் குறை கூறியுள்ளது. என்றாலும் பிஎன் அதனை மறுத்து வருகிறது.
நீதிமன்ற முடிவைத் தொடர்ந்து அந்த விவகாரத்தை “ஊழல்” எனக் குறிப்பிடுவதை பினாங்கு அரசாங்கம் மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என மாநில பிஎன் பணிக் குழுத் தலைவர் டாக்டர் தெங் ஹொக் நான் கோரியிருந்தார்.
பட்டர்வொர்த்தில் கல் உடைப்பு வேலைகளுக்காக தாம் இரண்டு துண்டு நிலங்களை வாங்குவதற்கு சமர்பித்த விண்ணப்பத்தை அவை இரண்டு சீனர் சங்கங்களுக்குச் சொந்தமானவை எனக் கூறி ரத்துச் செய்ததற்காக தான் ஹாக் ஜு மாநில அரசின் மீது 2005ம் ஆண்டு வழக்குப் போட்டார்.
2008ம் ஆண்டு மாநில அரசாங்க விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்க முன்னாள் பினாங்கு முதலமைச்சரும் முன்னாள் துணை முதலைமச்சரும் முன் வந்திருந்தால் நில மோசடி என்ற கேள்வியே எழுந்திருக்காது என்றும் ரஹ்மாட் சொன்னார்.
ஆனால் அந்த இரு முக்கியச் சாட்சிகளும் அவ்வாறு செய்யவில்லை. “ஒருவர் உண்மையக் கண்டு அஞ்சக் கூடாது. ஒருவர் தவறு செய்தால் மட்டுமே பயப்பட வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.