முஹைடின்: என்எப்சி மீது அரச ஆணையம் கிடையாது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை எனத் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.

காரணம், என்எப்சி மீது இப்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணைகளே போதுமானவை என அவர் இன்று சொன்னார்.

“அந்தத் திட்டம் தோல்வி அடைவதைக் காண எதிர்க்கட்சிகள் விரும்பலாம். அவ்வாறு தோல்வி கண்டால் தாங்கள் சொன்னது சரி என அவை கூறிக் கொள்ளலாம்,” என புத்ராஜெயாவில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்தார்.

கூட்டரசு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான அவர்கள் நடத்தி வரும் சர்சைக்குரிய என்எப்சி மீது விசாரணை நடத்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள வேண்டுகோள் பற்றி முஹைடின் கருத்துரைத்தார்.

ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் நிலத்தையும் வாங்கியது, ஷாரிஸாட் குடும்ப உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செலவு செய்தது போன்ற தொடர்பு இல்லாத செலவுகளை என்எப்சி செய்தது ஆகிய விவகாரங்களை பிகேஆர் எழுப்பிய பின்னர் பொது மக்களும் எதிர்க்கட்சிகளும் அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

2010ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் முறைகேடுகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் தேசிய விலங்குக் கூட மய்யமே (National Feedlot Centre) தவிர பொது நிதியைக் கொண்டு அதனை நடத்துவதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள என்எப்சி அல்ல என அண்மையில் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் பூவாங் அறிக்கை விடுத்திருந்தார்.

என்எப்சி தோல்வி காணவில்லை என்றும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் கூட விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் கூறியுள்ளார்.

130 துணை பண்ணைகளையும் பொருத்தமான அறுப்புக் கூடத்தையும் அரசாங்கம் அமைக்கத் தவறியதும், ஆஸ்திரேலிய கால் நடை நிறுவனமான லாம்பெர்ட் திடீரென அந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொண்டதும் தேசிய விலங்குக் கூடத் திட்டத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதற்குக் காரணம் என்றும் நோ குறிப்பிட்டிருந்தார்.