மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக, பல்கலைக்கழகச் சட்டத்தின் (யுயுசிஎ) கீழ் நடவடிக்கை எடுக்கும் தவறு மீண்டும் நிகழாதிருப்பதை பக்காத்தான் ரக்யாட் மாநில அரசுகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக்கொண்டுள்ளது.
பிகேஆர் தொடர்பு இயக்குனர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், தம் கட்சி கெடாவில் பாஸ் கட்சி தலைமையிலான அரசு, காலேஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்)வில் ஐந்து மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
“சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதே வேளை,பக்காத்தான் அரசுகள் யுயுசிஏ-க்குத் தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் நடக்க இடம்கொடுக்கக்கூடாது”, என்றாரவர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அவ்வுயர் கல்விக்கழகத்தில் மாணவர் தங்கும் விடுதிகளையும் தொழுகை அறையையும் கொண்டிருந்த ஒரு கட்டிடம், பள்ளிக்கூடமாக மாற்றப்படுவதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த ஐந்து மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
அந்த ஒழுங்குநடவடிக்கையை எதிர்த்து அவ்வைவரும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் ஹனிபா மைதின், கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக்கின் பெயரைக் குறிப்பிடாமலேயே தம் வலைப்பதிவில் அவரைக் கடுமையாக சாடியிருந்தார்.
‘யுயுசிஏ ஆதரவாளர்களுக்கு பக்காத்தானில் இடமில்லை’
“யுயுசிஏ ஆதரிக்கும் எவரும் பக்காத்தானில் இருக்கத் தகுதியில்லை. அப்படிப்பட்டவர்கள் பதவியில் இருந்தால் பதவியைவிட்டு விலகுவதே நல்லது”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
அசிசான் (இடம்),கேயுஐஎன் அதன் நடப்புச் சட்டங்களின்படிதான் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக அதன் நடவடிக்கையைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
மந்திரி புசார் அவ்வாறு கூறியது, யுயுசிஏ-ஐ ஒழிப்பதில் மும்முரம் காட்டும் பக்காத்தானின் கொள்கைக்கு முரணாக இருப்பதை கெராக்கான் பெபாஸ் அகேடமிக் அமைப்பு நேற்று ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
அதன் தலைவர் முகம்மட் சஃபான் அனாங், “சிலாங்கூருடன் ஒப்பிடும்போது கெடா மந்திரி புசாரின் செயல் பிற்போக்குத் தனமானது. சிலாங்கூர் ‘யுயுசிஏ-அற்ற மாநிலம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது, யுனிவர்சிடி சிலாங்கூரின் இடைக்கால துணை வேந்தரும் அதை அங்கீகரித்துள்ளார்”, என்றவர் கூறினார்.