அம்னோ, உறுப்பினர்கள் பொதுத் தேர்தலுக்குமுன் கீழறுப்புச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அதன் ஒழுங்கு வாரியத்தை முடுக்கிவிடக்கூடும்.
இதற்குமுன் இப்படி நடந்ததில்லை என்று கூறிய அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலுக்குப் பின்னரே உறுப்பினர்கள் கட்சி விதிகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமாகும் என்றார்.
“ஒவ்வொரு தேர்தலின்போதும் இப்படிப்பட்ட பிரச்னைகள் பெரிய கட்சிகளில் ஏற்படுவதுண்டு.இதில் ஒன்றும் புதுமை இல்லை.
“திருப்தி அடையாத வேட்பாளர்கள் இருப்பார்கள். ஆதரவாளர்கள்கூட கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடும்.அதனால், கட்சி ஒழுங்கைக் கட்டிக்காக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது”. நேற்றிரவு கோலாலம்பூரில் அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நஜிப் செய்தியாளர்களிடம் பேசினார்.
கட்சியில் ஒழுக்கக்கேடுகள் நிகழ்ந்தால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒழுங்கு வாரியத்துக்கு உண்டு என்று பிரதமர் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட அவர், கட்சி இயந்திரம் அதற்கு ஆயத்தமாக இருப்பதாய்க் குறிப்பிட்டார்.என்றாலும், வெற்றியை உறுதிப்படுத்த முயற்சிகளை மேலும் முடுக்கி விட வேண்டும் என்றாரவர்.
உச்சமன்றம், 1மலேசிய மக்கள் உதவித்திட்டம்(பிஆர்1எம்) பற்றியும் விவாதித்ததாக நஜிப் தெரிவித்தார். அதன்கீழ் தகுதிபெறும் எல்லா குடும்பங்களுக்கும் உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகவும் நஜிப் கூறினார்.
அரசு ஊழியர்களிடையே அதிருப்தி ஏற்படுவதைத் தவிர்க்க பொதுப்பணி புதிய சம்பளத் திட்டத்தை மறு ஆய்வு செய்யும் அரசாங்கத்தின் முடிவையும் உச்சமன்றம் ஏற்றுக்கொண்டது என்றாரவர்.
-பெர்னாமா