பெர்காசா சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்துகிறது

மலாய் உரிமைகள் போராட்ட குழு  பெர்காசா முதல் முறையாக நாளை (ஜனவரி 29) சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை கப்போங் பாருவில் நடத்துகிறது.

அவ்வியக்கம் ஊடகங்களையும் சீன சமூகத்திலிருந்து நண்பர்களையும் அழைத்துள்ளது. ஆனால் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று பெர்காசாவின் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த காலத்தில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது பெர்காசாவின் முதல் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு என்று சைட் ஹசான் கூறினார்.

ஹரிராயா மற்றும் தீபாவளி போன்ற பெருநாள்களிலும் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்த பெர்காசா திட்டம் வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

சுல்தான் சுலைமான் மண்டபத்தில் நாளை பிற்பகல் மணி 1.00 லிருந்து 3.00 வரையில் நடைபெறும் அந்த உபசரிப்பில் சுமார் 300 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

அந்த அழைப்பின் வழி என்ன செய்தியை வழங்கும் எண்ணத்தை  பெர்காசா கொண்டுள்ளது என்று வினவியபோது, அவர் “நாளை இப்ராகிம் பேசுவார், பொறுத்திருங்கள்”, என்று கூறினார்.

பெர்சே 2.0 பேரணிக்கு முன்னதாக, எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இப்பேரணி நடைப்பெறுமானால் சீன சமூகம் உணவுப் பொருள்களை தயார் செய்து கொண்டு வீட்டுக்குள் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படும், ஏனென்றால் “எதுவும் நடக்கலாம்” என்று இப்ராகிம் அலி கூறியிருந்தார்.