“கடந்த ஆறு மாதங்களாக உலக அளவில் சீனி விலைகள் குறைந்துள்ள வேளையில் சீனி விலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறிக் கொண்டு அதற்கான உதவித் தொகைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது.”
“ஆகவே சீனி விலைகளை ஒரு கிலோவுக்கு 2 ரிங்கிட் 30 சென்-ஆக வைத்திருப்பதின் மூலம் அரசாங்கம் உண்மையில் குறைவாக உதவித் தொகைகளைக் குறைவாகக் கொடுத்திருக்க வேண்டும். உள்நாட்டு வணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பெருமையுடன் கூறிக் கொள்வதைப் போல கூடுதலாக அல்ல.”
உலக அளவில் சீனி விலைகள் குறைந்துள்ள போது அதன் விலைகள் கூடி விட்டதால் மலேசியா சீனி உதவித் தொகையை அதிகரித்துள்ளது என கூறிக் கொள்வதின் வழி இஸ்மாயில் சாப்ரி மக்களை ஏமாற்றப் பார்க்கிறாரா ?” என டிஏபி தேசிய பிரச்சாரப் புரிவுச் செயலாளர் டோனி புவா கூறினார்.
சீனி விலையை கிலோ ஒன்றுக்கு 2 ரிங்கிட் 30 சென் -ஆக வைத்திருக்க அதற்கான உதவித் தொகையை 20 சென் முதல் 54 சென் வரை கூட்டியிருப்பதாக அமைச்சர் அண்மையில் கூறியிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
‘உலக அளவில் சீனி விலை பெருமளவு அதிகரித்துள்ள போதிலும் அரசாங்கம் அந்தப் பொருளின் விலையைக் குறைவாக வைத்திருப்பதாக இஸ்மாயில் சாப்ரி பெருமை அடித்துக் கொண்டார் என கடந்த வெள்ளிக் கிழமை தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டது.
அமைச்சரது கூற்றை மறுத்த புவா, ” 2011ம் ஆண்டு மே மாதம் கடைசியாக சீனி விலைகள் உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆறு மாதங்களில் உலக சீனி விலைகள் கணிசமாகக் குறைந்துள்ள வேளையில் விலைகள் “பெருமளவு கூடி விட்டதாக” கூறுவது தான் வினோதமாக இருக்கிறது.
யாருக்கு உதவித் தொகை ?
2011ம் ஆண்டு ஜுலை மாதம் பவுண்டு ஒன்றுக்கு 0.2947 அமெரிக்க டாலரை எட்டிய உலக சீனி விலை “ஒவ்வொரு மாதமும் வீழ்ச்சி கண்டு” கடந்த டிசம்பர் மாதம் 0.2342 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு 7 விழுக்காடு சரிந்துள்ளதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் சீனியின் நிகர விலைச் சரிவு ரிங்கிட் அளவில் இன்னும் 13.5 விழுக்காட்டுக்கு சமமாகும்.
உதவித் தொகை அதிகரிப்பால் உண்மையில் பயனடைவது யார் என்றும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா கேள்வி எழுப்பினார்.
உள் நாட்டில் Malayan Sugar Manufacturing Holdings (MSM Holdings), Tradewinds Corporation Bhd ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே சீனி விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. .
MSM Holdings, 71 விழுக்காடு பெல்டா துணை நிறுவனமாகும். Tradewinds நிறுவனத்தில் சையட் மொக்தார் அல் புஹாரி 43 விழுக்காடு பங்குகளையும் Felda Global Ventures Holdings Bhd, 20 விழுக்காடு பங்குகளையும் வைத்துள்ளனர்.
“உலக சீனி விலைகள் அதிகரிக்காத வேளையில் விலைகள் கூடியுள்ளதாகக் கூறி உதவித் தொகையை 170 விழுக்காடு உயர்த்த வேண்டியுள்ளதாக” கூறுவது உண்மையில் கவலை அளிக்கிறது. அமைச்சர் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அவர் சொன்னார்.
“உலக சீனி விலைகள் விழுந்து வரும் போது உதவித் தொகைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். அத்துடன் கூடுதல் உதவித் தொகையான 198 மில்லியன் ரிங்கிட்டினால் உண்மையில் நன்மை அடைவது யார் என்பதையும் அவர் விளக்க வேண்டும்,” என்றார் அவர்.