சீனி உதவித் தொகைக்கு தேர்தல் காரணம் அல்ல என்கிறார் இஸ்மாயில் சாப்ரி

“கிலோ ஒன்றுக்கு 20 சென் -ஆக இருந்த சீனி உதவித் தொகை 54 சென் – ஆக இப்போது அதிகரித்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு விரைவில் நிகழும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல் காரணமல்ல.”

இவ்வாறு உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது உண்மையல்ல என்றும் மக்களுடைய நிதிச் சுமையைக் குறைப்பதே அதன் நோக்கம் என்றும் அவர் சொன்னார்.

“அது உண்மையில் தவறான குற்றச்சாட்டு ஆகும். காரணம் வரும் பொதுத் தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை,” என பெரா நாடாளுமன்றத் தொகுதியில் நடத்தப்பட்ட சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அவர் கூறினார்.

இவ்வாண்டு அரசாங்கம் ஏற்றுக் கொண்ட சீனி உதவித் தொகை 262.41 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 567 மில்லியன் ரிங்கிட்டாக கூடியுள்ளது எனக் குறிப்பிட்ட இஸ்மாயில் சாப்ரி, மக்களுடைய சுமையைக் குறைப்பதே அதன் நோக்கம் என்றார்.

“சீனி உதவித் தொகையை அரசாங்கம் அதிகரிக்கா விட்டால் சந்தையில் அதன் விலை உயரும். அதைத் தொடர்ந்து மற்ற உணவுப் பொருட்களின் விலைகளும் ஏற்றமடையும்.” 

“அந்த நிலை ஏற்படுமானால் பொருள் விலைகள் கூடிக் கொண்டு போகும் வேளையில் மக்களுடைய நிதிச் சுமையை குறைக்க முயற்சி செய்வதில் எந்த நன்மையும் இல்லை,” என்றும் இஸ்மாயில் சாப்ரி குறிப்பிட்டார்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் பாகாங் தெங்கு மகோட்டா தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷாவும் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்பும் பங்கு கொண்டனர்.

பெர்னாமா