வெள்ளை அங் பாவ்: அரசாங்கம் தவறு செய்து விட்டது, கீ துவான் சாய்

பெர்க்காசா, சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மக்களுக்கு வெள்ளை ‘அங் பாவ்’ கொடுக்கப்பட்டுள்ளது, அறியாமையால் நிகழ்ந்த தவறு என அந்த வலச்சாரி அமைப்பு கூறிக் கொண்டுள்ளது. அது, சில சமயங்களில் மற்றவர்களைப் பற்றி மலாய்-முஸ்லிம்கள் எண்ணுவதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது.

மற்ற இனங்கள், சமயங்கள் ஆகியவற்றின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றி எல்லா மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் உணராமல் இருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. உண்மையில் சிலர் மிகுந்த மரியாதை கொடுக்கின்றனர். ஆனால் சீனப் பண்பாட்டில் மரணத்தைக் குறிக்கும் வர்ணத்தைக் கொண்ட கடித உறைகளில் பெர்க்காசா அங் பாவ்-களை வழங்கியிருக்கும் சம்பவம் முதன் முறையல்ல. உணர்வுகளை மதிக்காததற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டும் அல்ல.

இந்துக்கள் கலந்து கொண்டுள்ள நிகழ்வுகளில், அதுவும் அதிகாரத்துவ விருந்துகள் அல்லது தனியார் விருந்துகளில் கூட மாட்டிறைச்சி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். இதற்கு அறியாமை காரணமாக இருக்க முடியாது. குறிப்பாக அரசுத் துறைகள் பல  நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. அறியாமை ஒரு காரணம் எனக் கூறப்பட்டால் அதற்கு முடிவே இருக்காது. அதனால்தான் சட்டத்தின் கீழ் அறியாமை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

அதை விட முக்கியமானது, மற்றவர்களை எது புண்படுத்தும் என்பதை ஒருவர் அறிவதற்கும் புரிந்து கொள்வதற்கும் போதுமான அளவுக்கு இந்த நாட்டில் பல்வேறு இனங்களும் சமயங்களும் பண்பாடுகளும் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. அதன் வழி அத்தகைய தவறுகளை செய்யாமல் இருக்க இயலும்.

அத்துடன் வேறு விதமாக நிகழ்ந்தால் குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் நிகழ்வு ஒன்றில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஹலால் அல்லாத உணவு வழங்கப்பட்டால் என்ன நடக்கும்?

பிரபலமான அமைப்பு ஒன்று அதனைச் செய்வதாக வைத்துக் கொள்வோம். எதிரொலி எப்படியிருக்கும்? உடனடியாக பெர்க்காசா அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று அந்த அமைப்புக்கு எதிராக புகார் செய்திருக்கும். அந்த அமைப்புக்கு எதிராக தேச நிந்தனை வழக்குப் போட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் கண்டன அறிக்கையை அதன் தலைவர் இப்ராஹிம் அலி வெளியிட்டிருப்பார்.

பெர்க்காசா சீன சமூகத்துக்கு செய்துள்ள குற்றம் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது, மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்குமாறு மக்களுக்கு கல்வி புகட்ட அரசாங்கம் தவறி  விட்டதாகவே பொருள்படும். மலேசியர்களிடையே ஐக்கியத்தையும் சகிப்புத் தன்மையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் முயற்சிகளில் தான் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் சரியான பாதையில் அதனை அணுகவில்லை அல்லது சரியானதைச் செய்யவில்லை எனக் கருத வேண்டும்.

இந்த நாட்டில் முக்கியமான சமயத்தை பின்பற்றுகின்றவர்களும் பெரும்பான்மை இனத்தவரும்  சிறுபான்மை இனங்களுடைய உணர்வுகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர் என்ற எண்ணத்தை பெர்க்காசாவின் தவறு உறுதிப்படுத்துகிறது.

தி ஸ்டார் மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டது

அந்த எண்ணம் தவறானது என்று சிலர் கூறலாம். ஆனால் அது உண்மை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. சிறுபான்மை இனங்களுடைய உணர்வுகளை தான் மதிப்பது தொடர்பில் அரசாங்கம் ஒரு பாணியை ஏற்படுத்தி வருவதை அந்த சிலர் அறிய வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு 2009ம் ஆண்டு நிகழ்ந்த மாட்டுத் தலை சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் விலங்கை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டிப்பதற்குப் பதில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அவர்களுக்குள்ள உரிமையைத் தற்காத்துப் பேசினார்.

அதே வேளையில் பெரும்பான்மை இனம், முக்கிய சமயத்தைப் பின்பற்றுகின்றவர்கள் ஆகியோருடைய உணர்வுகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறது. ஒவ்வொருவரும் அவற்றை மதிக்க வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

நாம் அந்த வகையில் கடந்த நோன்பு மாதத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். தி ஸ்டார் நாளேடு ‘ரமதான் உணவுகள்’ என்னும் தலைப்பில் உணவு விடுதிகள் பற்றிய துணைச் சேர்க்கையை வெளியிட்டது. அதில் ஹலால் அல்லாத உணவு பற்றிய தகவலும் இடம் பெற்று விட்டது.

அதற்காக அந்த நாளேட்டை ஹிஷாமுடின் உட்பட பல தரப்புக்கள் வன்மையாகக் கண்டித்தனர். அதற்கு காரணம் கோரும் கடிதமும் கொடுக்கப்பட்டது. அந்த ஏடு பின்னர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்னர் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது.

இப்போது நிகழ்ந்துள்ள சம்பவம் அதற்கு நேர்மாறானது. வெள்ளைக் கடித உறைகளில் அங் பாவ் கொடுத்ததற்காக பெர்க்காசா சீனர்களிடம் மன்னிப்புக் கேட்குமா? அது அவ்வாறு செய்யா விட்டால் மேலே கூறப்பட்ட எண்ணமே மேலும் உறுதியாகும்.

“பெர்க்காசாவைப் பொறுத்த மட்டில் வெள்ளை என்பது தூய்மை, புனிதம், உண்மை” ஆகியவற்றைக் குறிப்பதாகவும் “ஈமச் சடங்குகளின் போது வெள்ளைக் கடித உறைகள் பயன்படுத்தப்படுவது பெர்க்காசாவுக்குத் தெரியாது” என்றும் அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி கூறியிருக்கிறார். அது, சீனர்களுக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் ஒரு திருவிழா பற்றி சாதாரண ஆய்வு செய்யக் கூட அது எண்ணவில்லை என்பதே உண்மையாகும்.

ஒன்று அதுவாக இருக்க வேண்டும் அல்லது சீனப் பண்பாடு பற்றி மேலும் அறிந்து கொள்ள அது விரும்பவில்லை எனக் கருத வேண்டும். அதிலிருந்து சிறுபான்மை இனங்களுடைய உணர்வுகள் பற்றி அது கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை என நாம் கருத வேண்டியிருக்கும்.

சையட் ஹசான் இவ்வாறு சொன்னதாக செய்திகள் வெளி வந்துள்ளன: “அதனால்தான் நமக்கு பல இனம் சமுதாயம் தேவை. நாம் ஒருவர் மற்றவருடைய பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ள அது உதவும்.”  அந்த சொற்றொடர் அவருடைய போக்கையும் பெர்க்காசாவின் சிந்தனையையும் கூட தெளிவாகக் காட்டுகிறது. நாம் ஏற்கனவே பல இன சமுதாயம். ஆனால் அவர்தான் அதனைக் காணவில்லை. உணரவில்லை!

அந்தச் சம்பவம் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை பெர்க்காசா நடத்தியதற்கான நோக்கத்தையே சிதறடித்து விட்டதுதான் துரதிர்ஷ்டமாகும்.  தான் ‘இனவாத அமைப்பு அல்ல’ என்பதை காட்டிக் கொள்ள அது விரும்பியது. ஆனால் சீனர்களை அவமானப்படுத்தும் வகையில் அது முடிந்தது.

மசீச பெர்க்காசாவுடன் ஒத்துழைக்கிறதா?

அது இனவாத அமைப்பு அல்ல என பெர்க்காசா கூறிக் கொண்டாலும் எந்த சீனரும் அதனை நம்ப மாட்டார். என்றாலும் பெர்க்காசா அந்த உபசரிப்பை நடத்துகிறது என நன்கு அறிந்திருந்தும் அந்த நிகழ்வுக்கு மசீச உறுப்பினர் ஒருவர் 50 பேரைக் கொண்டு வந்ததுதான் வியப்பாக இருக்கிறது.

அவர் சாதாரண மசீச உறுப்பினர் அல்ல. கட்சியின் செபூத்தே தொகுதி குழு உறுப்பினர் ஆவார். தாம் அந்த நிகழ்வுக்கு மசீச உறுப்பினராகச் செல்லவில்லை என கொலின் தியூ பின்னர் கூறிக் கொண்டாலும் அவர் அதில் கலந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என்றுதான் கூற வேண்டும். அவர் 50 பேரை அதற்கு கொண்டு வந்தார் என்பது அதை விட அதிர்ச்சி அளிக்கிறது.

திறந்த இல்ல உபசரிப்பில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளவில்லை என்னும் தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க அவர் 50 பேரைக் கொண்டு வந்தாரா? அது, மசீச பெர்க்காசாவுடன் ஒத்துழைக்கிறது என்பதைக் குறிக்கிறதா?  அதன் மூலம் பெர்க்காசா உண்மையில் பிஎன் -னுடன் இணைந்துள்ளது என்ற எண்ணம் உறுதியாகிறதா?

அண்மைய காலமாக எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையிலிருந்து சிறிதளவு வேறுபட்டாலும் அவற்றின் மீது மசீச தலைவர் சுவா சொய் லெக் உடனடியாகப் பாய்வதை கருத்தில் கொண்டால் பெர்க்காசா நிகழ்வு குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பெர்க்காசா எப்போதும் மசீச-வுக்கு ஒரு முள்ளைப் போல இருந்து வருகிறது. சீன சமூக நலனை அடிப்படையாகக் கொண்டு சுவா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் பெர்க்காசா கண்டித்து வருகிறது.  சுவா இஸ்லாத்தை அவமானப்படுத்துவதாகக் கூட  பெர்க்காசா சாடியுள்ளது. ஹுடுட் சட்டம் மீது சுவா தெரிவித்த கருத்துக்களை அது குறை கூறியுள்ளது. பூமிபுத்ராக்களுடைய சிறப்பு உரிமைகள் குறித்து சுவா கேள்வி எழுப்பியதாக அது போலீசில் புகார் செய்துள்ளது. இப்ராஹிம் அலி, சுவாவை ‘இனவாதி’ என்று கூட அழைத்துள்ளார்.  அது போன்ற அமைப்புடன் மசீச இணைந்து செயல்படுவது அதன் நிலைக்கு முரண்பாடானது ஆகும்.

ஆகவே உண்மையில் என்ன நடக்கிறது? மசீச-வுக்கும் பெர்க்காசாவுக்கும் இடையிலான உறவுகளில் உண்மை நிலை என்ன? அவை ஒரே பக்கத்தில்தான் இருக்கின்றனவா?

எல்லாம் எண்ணமே. அது சுவா-வுக்கும் நன்கு தெரியும். அந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காவிட்டால் மசீச மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ள சீனர்கள், தியூ மறுப்பறிக்கை விடுத்த போதிலும் அந்தக் கட்சி பெர்க்காசாவுடன் ஒத்துழைக்கிறது என்று எண்ணத் தொடங்குவர். அப்போது தாங்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் உணரக் கூடும்.

——————————————————————————–

கீ துவான் சாய் ‘March 8: The Day Malaysia Woke Up’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அந்தப் புத்தகம் வாசகர்களிடையே பிரபலமாக உள்ள புத்தங்களுக்கு Popular என்னும் நிறுவனம் வழங்கும் விருதுகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. அது சீன மொழியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.